ஜெயில் குயிலான மணீஷ் சிசோடியா.. இன்றும் ஜாமீன் மறுத்த உச்சநீதிமன்றம்! 8 மாதமாக தொடரும் சிறைவாசம்
டெல்லி: டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை உச்சநீதிமன்றம் ஏற்க மறுத்து காவலை நீட்டித்து உள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தலைநகர் டெல்லியில் மாநில அரசால் புதிய மதுபான கொள்கை அமல்படுத்தப்பட்டது. இந்தக் கொள்கையில் இடம் பெற்றிருந்த வரிக் குறைப்பு உள்ளிட்ட முக்கிய சலுகைகள் குறித்த விவரங்களை முன்கூட்டியே கசிய விடப்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இதன் மூலம் மதுபான ஆலை அதிபர்கள் மற்றும் விற்பனையாளர்கள் பல கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்தாகவும் புகார்கள் வந்தன. இந்த விவரங்களை கசியவிட்டு ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்கள் பல கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

இதனை அடுத்து டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா, இது தொடர்பாக சிபிஐ விசாரணை மேற்கொள்ள பரிந்துரை செய்தார். அதன் விளைவாக, டெல்லி துணை முதலமைச்சராக ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் மணீஷ் சிசோடியாவின் வீடு உள்பட 31 இடங்களில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக சோதனை செய்தனர். அதன் தொடர்ச்சியாக மணீஷ் சிசோடியா உள்ளிட்ட 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டது.
மணீஷ் சிசோடியாவிடம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 17 ஆம் தேதி தேதி சிபிஐ அதிகாரிகள் விசாரணை செய்தனர். அதேபோல் டெல்லி தலைமை செயலகத்தில் இருக்கும் மணீஷ் சிசோடியாவின் அலுவலகத்திலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதன் காரணமாக டெல்லி ஆளுநருக்கும் ஆம் ஆத்மி அரசுக்கும் இடையே மோதல் வெடித்தது. இதை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என ஆம் ஆத்மி குற்றம்சாட்டியது. இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதி மணீஷ் சிசோடியாவுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியது.
மணீஷ் சிசோடியா அதில் ஆஜராக அவகாசம் கோரினார். அது ஏற்கப்பட்டு ஒரு வாரம் அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி அவர் மீண்டும் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகினார். மறுநாள் அவர் சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவரை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதனை அடுத்து தனக்கு ஜாமீன் கோரி மணீஷ் சிசோடியா உச்சநீதிமன்றத்தை நாடினார். ஆனால், உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. இந்த நிலையில் அவர் தன்னுடைய முதலமைச்சர் பதவியையும் ராஜினாமா செய்தார்.
தொடர்ந்து பல முறை மணீஷ் சிசோடியா நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தும் அது தள்ளுபடி செய்யப்பட்டே வந்தது. 8 மாதங்களாக விசாரணைக் கைதியாக சிறையில் இருந்து வரும் மணிஷ் சிசோடியா, மீண்டும் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு இன்று உச்சநிதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது அவருக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்த உச்சநீதிமன்றம், ஆறு மாதம் முதல் 8 மாதத்திற்குள் வழக்கின் விசாரணையை முடிக்க விசாரணை அமைப்புகளுக்கு உத்தரவு பிறப்பித்தது.












Click it and Unblock the Notifications