பேரறிவாளன் மனு.. சிபிஐ மீது அதிருப்தி தெரிவித்த உச்ச நீதிமன்றம்.. தமிழக அரசுக்கு கேள்வி
டெல்லி: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பல ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளன் விடுதலைக்காக எடுத்த நடவடிக்கைகள் பற்றி 2 வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 27 வருடங்களுக்கு மேலாக சிறையில் இருந்துவருகிறர் பேரறிவாளன். இவர் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
வெடிகுண்டுக்காக தான் பேட்டரி வாங்கித் தரவில்லை என விசாரணை அதிகாரி கூறியதன் அடிப்படையில், அந்த பெல்ட் வெடிகுண்டு தயாரிக்கப்பட்டது குறித்து விசாரணை கோரி தனது மனுவை பேரறிவாளன் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு செவ்வாய்கிழமை நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.

சிபிஐ பதில்
அப்போது, நீதிபதி நாகேஸ்வர ராவ், சிபிஐ தரப்பை பார்த்து, ஏற்கனவே உத்தரவிட்டபடி புதிதாக வழக்கு விசாரணை நிலவர அறிக்கை தாக்கல் செய்துவிட்டீர்களா என்று கேட்டார், அதற்கு சிபிஐ தரப்பு வழக்கறிஞர், இலங்கை உள்ளிட்ட பல வெளிநாடுகளில் விசாரணை நடத்த வேண்டி உள்ளதாகவும், இதற்காக அந்நாட்டு அரசுகள் இன்னும் அனுமதி அளிக்கவில்லை என்றும் கூறினார்.

நம்பிக்கை இல்லை
இதை கேட்டு அதிருப்தி அடைந்த நீதிபதி நாகேஸ்வர ராவ், மிகப்பெரிய வெளியுறவுக் கொள்கைகள் இருந்தும் அனுமதி கூட பெற முடியவில்லையா என்று கேட்டதுடன், சிபிஐ புதிய தகவல்கள் அடங்கிய அறிக்கையை அளிக்கும் என நம்பிக்கை இல்லை என்றார்.

அமைச்சரவை தீர்மானம்
அப்போது பேசிய பேரறிவாளன் தரப்பு வழக்கறிஞர், பேரறிவாளன் உள்ளிட்டோர் விடுதலைக்காக தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி பரிந்துரைத்தும் ஆளுநர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றார்.

எங்களுக்கும் தெரியும்
அப்போது குறுக்கிட்ட சிபிஐ வழக்கறிஞர் விடுதலை குறித்து ஆளுநருக்கு நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்க தேவையில்லை என்றார். அதற்கு பதிலளித்த நீதிபதி நாகேஸ்வரராவ், இந்த விவகாரத்தில் ஆளுநருக்கு உத்தரவிட முடியாது என தங்களுக்கு தெரியும் என்றார். அத்துடன் பேரறிவாளன் விடுதலைக்காக எடுத்த நடவடிக்கைகள் பற்றி 2 வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி நாகேஸ்வர் ராவ் உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications