நீட் தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கு.. மத்திய அரசை லெஃப்ட் ரைட் வாங்கிய உச்சநீதிமன்றம்!
டெல்லி: நீட் வினாத்தாள் கசிவு நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளது.
இந்த ஆண்டு, இளங்கலை மருத்துவ மாணவர்களுக்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வை தேசிய தேர்வு முகமை, கடந்த மே 5-ஆம் தேதி நடத்தியது. நாடு முழுவதும் 4,750 மையங்களில் இந்த தேர்வு நடத்தப்பட்டது. இதில் 24 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். இதன் முடிவுகள் ஜூன் 14ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், ஜூன் 4ம் தேதியே முடிவுகள் வெளியாகின.

இந்த ஆண்டு நீட் தேர்வு நடைபெற்ற அன்றே வினாத்தாள் கசிந்ததாக பல்வேறு புகார்கள் எழுந்தன. இது ஒன்றும் புதிதல்ல. கடந்த 2019-ஆம் ஆண்டு நடந்த தேர்வில் முறைகேடு செய்ததாக 4 பேர் கைது செய்யப்பட்டார்கள். 2020-ஆம் ஆண்டு நடந்த தேர்வில் முறைகேடு செய்ததாக 5 பேர் கைது செய்யப்பட்டார்கள். 2021-ஆம் ஆண்டு தேர்வில் 15 பேர் முறைகேடு செய்ததாக கைது செய்யப்பட்டார்கள்.
நீட் தேர்வு என்பது, இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் என்று நான்கு பாடப்பிரிவுகளில் இருந்து 45 கேள்விகள் வீதம் 180 கேள்விகள் கேட்கப்படும். ஒவ்வொரு கேள்விக்கும் 4 மதிப்பெண்கள் வீதம் மொத்தம் 720 மதிப்பெண்கள் கிடைக்கும். ஒரு கேள்விக்கு தவறாக பதில் அளித்தால் ஒரு மதிப்பெண் குறைக்கப்படும். ஒரு கேள்விக்கு பதில் அளிக்காமல் விட்டிருந்தால் 716 மதிப்பெண்கள் கிடைக்கும்.
ஒரு கேள்விக்கு மட்டும் தவறாக பதில் அளித்திருந்தால் அவருக்கு 179 கேள்விகளுக்கான 716 மதிப்பெண்களில் ஒரு மதிப்பெண் குறைக்கப்பட்டு 715 மதிப்பெண்கள் பெறலாம். இப்படி இருக்க, சில மாணவர்கள் 719 மற்றும் 718 மதிப்பெண்ணும் பெற்றிருந்தனர். நீட் தேர்வு மதிப்பீட்டு முறைப்படி இந்த மதிப்பெண்களை எந்த மாணவரும் பெறவே முடியாது. எனவே இந்த தேர்வில், ஒருவர் பெறுவதற்கு சாத்தியமில்லாத மதிப்பெண்களை சில மாணவர்கள் பெற்றிருந்தது பலருக்கு சந்தேகத்தை எழுப்பியது.
இதற்கு முன்பு கடந்த 8 ஆண்டுகளில் மொத்தமாக 7 பேர் மட்டுமே முழு மதிப்பெண் பெற்ற நிலையில், இந்த ஆண்டு 67 மாணவர்கள் முழு மதிப்பெண்ணான 720 மதிப்பெண் பெற்றுள்ளனர். அதிலும், ஹரியானாவின் ஃபரிதாபாத்தில் உள்ள ஒரு மையத்தில் தேர்வு எழுதியவர்களில் 6 பேர் முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இதற்கெல்லாம் மேலாக 12-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறாதவர்கள் கூட, நீட் தேர்வில் 700-க்கும் அதிகமான மதிப்பெண்களை பெற்றிருப்பது நீட் தேர்வு என்பது குளறுபடிகளின் உச்சமாக இருப்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது என எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை எழுப்பின.
இவ்வளவு மாணவர்கள் முதலிடம் பிடித்தது, எவ்வாறு சாத்தியமாகும் என்றால், வினாத்தாள் தேர்வுக்கு முன்பே வெளி வருவது, பணம் பெற்றுக் கொண்டு விடைகளை பகிர்வது, ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதுவது என பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதற்கான ஆதாரங்கள் இத்தேர்வு முறையே மோசடி என்று உறுதி செய்கிறது. மேலும், நீட் தேர்வில் முறைகேடுகள் நடந்தது உண்மை என்று ஒன்றிய கல்வித் துறை அமைச்சரே ஒப்புக் கொண்டுள்ளார் என்றும் நாடாளுமன்றத்திலும் இது தொடர்பாக குடியரசுத் தலைவர் பேசியுள்ளார் எனவும் எதிர்க்கட்சி தலைவர்கள் குற்றச்சாட்டுகளை அடுக்கினர்.
இந்நிலையில், நீட் வினாத்தாள் கசிவு குறித்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
விசாரணையில், "ஒவ்வொரு ஆண்டும் நீட் வினாத்தாள் எப்போது இறுதி செய்யப்படுகிறது? எப்போது அச்சிடப்படுகிறது, எப்போது தேர்வு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது? என்பது குறித்த விவரங்களை தேசிய தேர்வு முகமை அளிக்க வேண்டும். சிலர் முறைகேட்டில் ஈடுபட்டுள்ள நிலையில், ஒட்டுமொத்த மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் வகையில், தேர்வுகளை ரத்து செய்ய வேண்டுமா? வினாத்தாள் கசிவு விவகாரத்தில் இன்னுமா கண்டுபிடித்துக்கொண்டிருக்கிறீர்கள்?
என்ன நடந்தது என்பதை நாம் இன்னும் மறுத்துக்கொண்டே இருக்க முடியாது. தவறு செய்த மாணவர்களை கண்டறியாவிட்டால் மறு தேர்வு நடத்த உத்தரவிடுவது அவசியம். இந்த விவகாரத்தில் எத்தனை பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டது? மாணவர்கள் தவிர்த்து மற்றவர்கள் எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்? என்ற விவகாரத்தை தேசிய தேர்வு முகமை சமர்ப்பிக்க வேண்டும்.
சமூக ஊடகங்களில் நீட் வினாத்தாள் கசிந்தது உண்மை என்றால் இந்த வினாத்தாள் கசிவு என்பது மிகப்பெரியதாக இருக்க வாய்ப்பு இருக்கிறது. வாட்ஸ்அப், டெலிகிராம் போன்றவற்றில் இவை கசிந்திருக்கிறது என்றால் அது காட்டு தீ போல பரவி இருக்கும். இது 20 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்களின் வாழ்க்கை சார்ந்த விவகாரம்” என்று கேள்வி எழுப்பி தலைமை நீதிபதி அதிருப்தி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications