இதான் தமிழ்நாட்டிற்கு தேவை.. டிஆர்பி வீட்டிற்கு போன அதிமுக எம்பி- டெல்லியில் கைகோர்த்த திமுக அதிமுக
டெல்லி: தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு தடை விதிக்க வேண்டும் என்பதற்காக டெல்லியில் தமிழ்நாடு மாநில கட்சிகள் ஒன்றாக கரம் கோர்த்து இருக்கின்றன. அரசியல் பாகுபாடு கடந்து தமிழ்நாடு அரசியல் கட்சிகள் ஒன்றாக களத்தில் இறங்கி உள்ளது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் நீட் தேர்விற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் தீவிரமாக எழுந்து வருகின்றன. ஒவ்வொரு வருடமும் மாணவ, மாணவியரை அழுத்தத்திற்கு உள்ளாக்கி, அவர்களின் உயிரை குடிக்கும் இந்த தீர்வை மொத்தமாக ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் பலமாக வைக்கப்பட்டு வருகிறது.
நீட் தேர்வுக்கு எதிராக மாநில அரசு சட்டம் இயற்றி உள்ளது. கடந்த சட்டசபை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் அவையில் இது தொடர்பான சட்ட மசோதாவை தாக்கல் செய்தார்.

ஆளுநர்
தமிழ்நாடு ஆளுநர் ஆர். என் ரவி இந்த சட்டத்திற்கு ஒப்புதல் அளித்து அதை குடியரசுத் தலைவருக்கு அளிக்க வேண்டும். ஆனால் ஆளுநர் இன்னும் இந்த சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. இந்த நிலையில் நீட் விலக்கு தொடர்பான அரசின் மசோதா பரிசீலனையில் உள்ளது என்று தமிழ்நாடு ஆளுநர் மாளிகை தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

சந்திப்பு
இந்த நிலையில்தான் இரண்டு நாட்களுக்கு முன் நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிப்பது தொடர்பாக தமிழக எம்.பி.க்கள் குழு குடியரசுத் தலைவர் மாளிகைக்கு சென்று இருந்தனர். அங்கு தமிழ்நாடு எம்பிக்கள் சார்பாக மனு அளிக்கப்பட்டது. அதன்பின் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து அவரிடம் இது தொடர்பாக ஆலோசனை நடத்தவும் கோரிக்கை வைக்கப்பட்டது.

சுவாரசிய சம்பவம்
இது தொடர்பாக ஏற்கனவே ஊடகங்களில் செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த சந்திப்பின் போது மிகவும் சுவாரசியமான சம்பவம் ஒன்றும் நடைபெற்றுள்ளது குறித்த விவரம் வெளியாகி உள்ளது. திமுக எம்பி டிஆர் பாலு தலைமையில் இந்த அனைத்துக்கட்சி குழு குடியரசுத் தலைவர் மாளிகைக்கு சென்றுள்ளது.

அனைத்து கட்சி குழு
விடுதலை சிறுத்தைகள், இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள், காங்கிரஸ், அதிமுக எம்பிக்கள் இந்த குழுவில் இருந்தனர். அதன்பின் அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க குழு அனுமதி கேட்டு உள்ளது. ஆனால் அமைச்சர் அப்போது வேறு மீட்டிங்கில் இருந்த காரணத்தால் நேற்று முதல்நாள் அவரை சந்திக்க முடியவில்லை. அதன்பின் நேற்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க அப்பாயின்மென்ட் அளிக்கப்பட்டு இருந்தது.

கூட்டம்
இதையடுத்து நேற்று முதல்நாள் குடியரசுத் தலைவர் மாளிகை சென்றுவிட்டு அதிமுக எம்பி நவதீன கிருஷ்ணன் உள்ளிட்ட அனைத்து கட்சி எம்பிக்களும் அப்படியே திமுக எம்பி டிஆர் பாலு வீட்டிற்கு சென்றனர். அங்கு மொத்தமாக எல்லோரும் சில நிமிடங்கள் இருந்து நீட் தேர்வு விலக்கு குறித்து ஆலோசனை செய்தனர். எல்லோருக்கும் அங்கு டீ, காபி சிற்றுண்டி வழங்கப்பட்டது.

அதிசயம்
அதிமுக எம்பி நவதீன கிருஷ்ணன் உள்ளிட்ட அனைத்து கட்சி எம்பிக்கள் இப்படி திமுக எம்பியின் வீட்டிற்கு சென்றது பெரிய அளவில் கவனம் பெற்றது. தமிழ்நாடு பிரச்சனைக்காக அதிமுக,திமுக இப்படி ஒன்றாக கரம் கோர்த்து டெல்லியில் இணைந்து குரல் கொடுத்தது பெரிய அளவில் கவனம் பெற்றது. நீண்ட நேரம் கட்சி அரசியல் கடந்து இவர் ஆலோசனைகளை மேற்கொண்டனர்.

தமிழ்நாட்டிற்கு தேவை
அரசியல் கடந்து பொது பிரச்சனைகளில் இப்படி ஒன்றாக இருப்பதை கேரள, கர்நாடக எம்பிக்களிடம் அதிகம் பார்க்க முடியும். அது தமிழ்நாட்டிலும் எதிரொலித்து உள்ளது பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications