தமிழ்நாடு பயணம் மறக்க முடியாதது.. பாரத் மாதா கிஜே என பாஜகவினர் முழங்கும் வீடியோ பகிர்ந்து மோடி நன்றி
டெல்லி: நேற்றைய தமிழ்நாடு பயணத்தை தன்னால் மறக்க முடியாது என பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் பதிவிட்டு உள்ளார்.
சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடி ரூ.31,400 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார்.
இதில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீட் தேர்வு விலக்கு, கச்சத்தீவு மீட்பு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக மேடையிலேயே பிரதமரிடம் கோரிக்கை விடுத்தார்.

பிரதமருக்கு வரவேற்பு
முன்னதாக சென்னை விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் மோடியை ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, மத்திய அமைச்சர் எல்.முருகன், தலைமைச் செயலாளர் இறையன்பு, தமிழ்நாடு காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு ஆகியோர் வரவேற்றனர். விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் அடையாறு சென்றடைந்தார். அங்கு அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு அளித்தார்.

பாஜக உற்சாக வரவேற்பு
பிரதமர் மோடியை வரவேற்க சுமார் 5 ஆயிரம் பாஜக தொண்டர்கள் சாலையோரங்களில் திரண்டு நின்றனர். அவர்களுடன் பிரதமர் மோடிக்கு காவி மயமான வரவேற்பு அளிக்க காவி உடைகள் அணிந்த கலைஞர்களை கொண்டு கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனால் அகம் மகிழ்ந்த பிரதமர் நரேந்திர மோடி காரை விட்டு வெளியே தலைகாட்டி கை அசைத்தார்.

தமிழ்நாட்டின் சிறப்பு
இந்த விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டு மக்களுக்கு வணக்கம் என்று கூறி உரையை தொடங்கினார். "தமிழ்நாடு வருவது எப்போது மகிழ்ச்சிக்கு உரியதே. தமிழ்நாட்டு மக்களின் கலாச்சாரம் சிறப்பு வாய்ந்தது. தமிழ் மொழி நிலையானது. தமிழ் கலாச்சாரம் உலகளாவியது. சென்னை முதல் கனடா வரை மதுரை முதல் மலேசியா வரை நாமக்கல் முதல் நியூயார்க் வரை சேலம் முதல் தென்ஆப்பிரிக்கா வரை பொங்கல், புத்தாண்டு காலங்கள் மிகுந்த ஆர்வம் நிறைந்தவை. தமிழ்நாட்டை சேர்ந்த யாராவது ஒருவர் தலைசிறந்தவராக விளங்குகிறார்." எனப் பாராட்டினார்.
|
ட்விட்டரில் பிரதமர் மோடி நன்றி
பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற இந்த விழாவில் தமிழ்நாட்டின் பல்வேறு கோரிக்கைகளை விழா மேடையிலேயே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுப்பியது வரவேற்பை பெற்றாலும் பாஜகவினர் அதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, "தமிழ்நாட்டுக்கு நன்றி! நேற்றைய பயணம் மறக்க முடியாதது." என்று பதிவிட்டு வீடியோ தொகுப்பை வெளியிட்டுள்ளார். அதில், நேரு உள்விளையாட்டு அரங்கில் மோடியை பார்த்தவுடன் அங்கிருந்த பாஜகவினர் பாரத் மாதா கி ஜே என முழங்கும் வீடியோ இடம்பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications