போன் போட்டு நீங்க பசியா இருப்பீங்களான்னு கேட்பாங்க.. அதான் பசி குறியீடு! ஸ்மிருதி இரானியின் விளக்கம்
டெல்லி: உலக பசி குறியீடு நாடுகளின் பட்டியலில் இந்தியா பின் தங்கி இருக்கும் நிலையில் போன் செய்து நீங்கள் பசியோடு இருக்கிறீர்களா என்று கேட்பதே பசி குறியீடு என மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்து உள்ள கருத்துக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து உள்ளன.
2023 ஆம் ஆண்டுக்கான உலக பசி குறியீடு நாடுகளின் பட்டியல் வெளியானது. 125 நாடுகளை கொண்ட பட்டியலில் இந்தியா 111 வது இடத்தில் மிகவும் பின் தங்கி இருக்கிறது. ஊட்டச்சத்து குறைவான நாடுகளின் பட்டியலில் இந்தியா 28.7 புள்ளிகள் மட்டுமே பெற்று உள்ளதாக உலக பசி குறியீடு அறிக்கை தெரிவிக்கிறது. கடந்த வியாழன் அன்று வெளியிடப்பட்ட இந்த பட்டியலில் இந்தியாவின் பசியின் நிலை மிகவும் தீவிரமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதிலும் குறிப்பாக இந்த குறியீட்டில் இந்தியா, தனது அண்டை நாடுகளை விட பின் தங்கி காணப்படுகிறது. 125 நாடுகளை கொண்ட இந்த பசி குறியீட்டு பட்டியலில் அண்மையில் பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கை கூட 60 வது இடத்தில்தான் உள்ளது. நேபாளம் 69 வது இடத்திலும் வங்கதேசம் 81 வது இடத்திலும் இருந்து வருகிறது. அதேபோல் பொருளாதார நெருக்கடியில் மற்றொரு நாடான பாகிஸ்தான் கூட இந்த பட்டியலில் 102 வது இடத்தை பிடித்து இந்தியாவை விட முன்னிலை வகிக்கிறது.
வேகமாக வளர்ந்து வரும் நாடாக கூறப்படும் இந்தியா பசி குறியீட்டில் இந்த அளவுக்கு பின் தங்கி இருப்பது பெரும் விவாதப் பொருளானது. இந்த நிலையில் தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் உள்ள தாஜ் டெக்கானில் இந்தியாவில் பெண்களின் எதிர்கால பங்கு என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், உலக பசி குறியீடு பட்டியலை நிராகரிப்பதாக தெரிவித்து இருக்கிறார்.
உலக பசி குறியீடு உட்பட சில பட்டியல்கள் வேண்டுமென்றே "இந்தியாவின் நிலையை முன்னிறுத்தவில்லை. அவர்கள் எப்படி இந்த பட்டியலை தயாரிக்கிறார்கள். 140 கோடி மக்கள் வசிக்கும் இந்தியாவில் 3000 பேருக்கு போன் செய்து நீங்கள் பசியோடு இருக்கிறீர்களா என்று கேட்கிறார்கள். நான் சொல்வதை நம்புங்கள். டெல்லியில் காலை 4 மணிக்கு நான் வீட்டை விட்டு வெளியேறுவேன். காலை 5 மணிக்கு கொச்சி செல்ல விமானத்தில் ஏறினேன். அங்கு நடைபெற்ற மாநாட்டில் நான் கலந்துகொண்டேன்.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டதற்காக நான் காலை 5 மணிக்கே விமானத்தில் ஏற வேண்டி இருந்தது. நான் சாப்பிடுவதற்கு 10 மணி ஆகிவிடும். அந்த நேரத்தில் நீங்கள் எனக்கு போட்டு, பசியோடு இருக்கிறீர்களா என்று கேட்டால், ஆம் என்றே நான் பதில் சொல்வேன்." என்று தெரிவித்தார். ஸ்மிருது இரானியின் இந்த கருத்துக்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். "இதைவிட வெட்கப்பட வேண்டிய விசயம் என்று வேறு இல்லை. உங்கள் அறியாமை அல்லது அலட்சிய தன்மை இங்கு இல்லை." என்றார்.












Click it and Unblock the Notifications