ஸ்டாலின் கோரிக்கை ஏற்பு.. பழங்குடியினர் பட்டியலில் நரிக்குறவர், குருவிக்காரர்- மத்திய அரசு ஒப்புதல்
டெல்லி: பழங்குடியினர் பட்டியலில நரிக்குறவர், குருவிக்காரர் உள்ளிட்ட சமூகத்தினரை சேர்க்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மாமல்லபுரம் அருகே உள்ள ஸ்தல சயன பெருமாள் கோயிலில் அன்னதானத்தின் போது பூஞ்சேரி நரிக்குறவர் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த மக்களை பந்தியில் அமரவிடாமல் கோயில் நிர்வாகத்தினர் தடுத்து நிறுத்தினர்.
இதனால் வேதனையடைந்த நரிக்குறவ பெண் அஸ்வினி தனக்கு நேர்ந்த அவமானங்களை யூடியூப் வாயிலாக தெரிவித்திருந்தார். இது சமூகவலைதளத்தில் வேகமாக பரவியது. இந்த வீடியோ முதல்வர் ஸ்டாலினின் கவனத்திற்கும் சென்றது.

கோயிலில் ஆய்வு
இதனைத் தொடர்ந்து, அந்தக் கோவிலில் ஆய்வு மேற்கொண்ட இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு, அஸ்வினி மற்றும் நரிக்குறவர் சமூகத்தினரை அழைத்து அன்னதானம் வழங்கி, அவர்களுடன் சேர்ந்து அமர்ந்து சாப்பிட்டார். பின்னர் தீபாவளி அன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பூஞ்சேரியில் வசிக்கும் நரிக்குறவர் மற்றும் இருளர் இனத்தைச் சேர்ந்த 282 பேருக்கு வீட்டுமனை பட்டாக்கள், வங்கிக் கடனுதவிகள் ஆகியவற்றை வழங்கினார்.

நரிக்குறவர் பெண்
நரிக்குறவர் இனப் பெண் அஸ்வினிக்கும் கடனுதவி ஆணையை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின். இதையடுத்து அஸ்வினியின் வீட்டுக்கு முதல்வர் ஸ்டாலின் சென்றிருந்தார். இதையடுத்து ஆவடியில் நரிக்குறவ சமூகத்தினருடன் வீடியோ காலில் பேசிய முதல்வர் ஸ்டாலினிடம், தங்கள் சமூகத்தை பழங்குடியினத்தவர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

அஸ்வினி
இதே கோரிக்கையை அஸ்வினியும் விடுத்திருந்தார். இந்த நிலையில் கோரிக்கை பரிசீலிப்பதாக கூறிய முதல்வர் ஸ்டாலின் அடுத்த நாளே அதாவது மார்ச் மாதம் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினார். அதில் நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர் சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பது நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது.

பழங்குடியினர் பட்டியல்
இந்த இரு சமூகத்தினரையும் பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதன் மூலம், இவர்களும் அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெறுவதற்குரியவர்களாக தகுதி பெறுவர். மேலும், இந்த இரு சமூகத்தினரையும் பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கு இந்தியத் தலைமைப் பதிவாளரும் ஒப்புதல் வழங்கியுள்ளார். எனவே நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர் சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்குமாறு கடிதம் எழுதயிருந்தார்.

முதல்வர் கோரிக்கை
இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலினின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்றது. அதன்படி பழங்குடியினர் பட்டியலில நரிக்குறவர், குருவிக்காரர் உள்ளிட்ட சமூகத்தினரை சேர்க்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தமிழ்நாடு, கர்நாடக உள்ளிட்ட மாநிலங்களில் பழங்குடியினர் பட்டியலில் விடுபட்டிருந்த சமுதாயத்தினரையும் சேர்க்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

6 மாதத்தில் நிறைவேறிய நீண்ட கால கோரிக்கை
அது போல் சத்தீஸ்கர், ஹிமாச்சல் பிரதேசத்திலும் வேறு சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பழங்குடியினருக்கு வழங்கப்படும் அனைத்து சலுகைகளும் நரிக்குறவர், குருவிக்காரர்களுக்கு கிடைக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பான மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு ஏற்கெனவே உள்ளவற்றில் சட்ட திருத்தம் மேற்கொண்டவுடன் இந்த மசோதா அமலுக்கு வரும். முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை வைத்த 6 மாதங்களில் மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications