திரும்ப வந்துட்டோம்னு சொல்லு.... மீண்டு வரும் உள்நாட்டு விமான சேவை... ஹர்தீப் சிங் பூரி பெருமிதம்
டெல்லி: கொரோனா பரவல் காரணமாகப் பாதிக்கப்பட்டிருந்த உள்நாட்டு விமானச் சேவை தற்போது கொரோனாவுக்கு முந்தைய நிலையை அடைந்துள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
கடந்தாண்டு இறுதியில் பரவ தொடங்கிய கொரோனா காரணமாக விமான துறை மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டது. கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களிலேயே பல்வேறு நாடுகளும் சர்வதேச விமானச் சேவைக்குத் தடை விதித்தன.
இந்தியாவில் மார்ச் 25ஆம் தேதி முதல் அனைத்து பயணிகள் விமானச் சேவைகளுக்கும் தடை விதிக்கப்பட்டது. சரக்கு விமானங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது.

கொரோனா பரவல் குறையத் தொடங்கியதைத் தொடர்ந்து சுமார் மூன்று மாதங்களுக்குப் பின், கடந்த மே 25ஆம் தேதி முதல் உள்நாட்டு விமானச் சேவை படிப்படியாகத் தொடங்கப்பட்டது.
இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்த உள்நாட்டு விமானச் சேவை தற்போது கொரோனாவுக்கு முந்தைய நிலையை அடைந்துள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "உள்நாட்டு விமான போக்குவரத்து சீராக கொரோனா முந்தைய நிலை நோக்கி நகர்கிறது. ஜனவரி 9ஆம் தேதி மொத்தம் 2,151 உள்நாட்டு விமானங்கள் இயக்கப்பட்டன. இதன் மூலம் 2,59,851 பயணிகள் தங்கள் விரும்பும் இடங்களுக்குச் சென்றுள்ளனர்" என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, சர்வதேச விமானச் சேவைக்கு விதிக்கப்பட்ட தடை வரும் ஜனவரி 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் கடந்த புதன்கிழமை அறிவித்தது. கொரோனா பரவ தொடங்கியபோது சர்வதேச விமான போக்குவரத்து முற்றிலுமாக முடக்கப்பட்டது. தற்போது நாடுகளுக்கு இடையே உள்ள ஒப்பந்தங்களின் அடிப்படையிலேயே சர்வதேச விமானப் போக்குவரத்து இயங்கி வருகிறது.
பிரிட்டன் நாட்டில் தற்போது உருமாறிய கொரோனா கண்டறியப்பட்டுள்ள நிலையில், பெரும் எதிர்ப்புக்கு மத்தியில் பிரிட்டன் உடனான விமானச் சேவை கடந்த சில நாட்களுக்கு முன் தொடங்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications