ஜெகதீப் தன்கருக்கு திடீர் நெஞ்சுவலி.. எய்ம்ஸ் மருத்துவமனையில் துணை ஜனாதிபதி அனுமதி.. தீவிர சிகிச்சை
டெல்லி: துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கருக்கு இன்று காலையில் திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உடனடியாக அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நம் நாட்டின் துணை ஜனாதிபதியாக ஜெகதீப் தன்கர் உள்ளார். ராஜ்யசபாவின் தலைவராகவும் இவர் செயல்பட்டு வருகிறார். ஜெகதீப் தன்கர் டெல்லியில் உள்ள துணை ஜனாதிபதி பங்களாவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

ஜெகதீப் தன்கருக்கு தற்போது 73 வயது ஆகிறது. இந்நிலையில் தான் இன்று அதிகாலை 2 மணியளவில் திடீரென்று ஜெகதீப் தன்கருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
ஜெகதீப் தன்கருக்கு லேசனா நெஞ்சுவலி ஏற்பட்டது. அவரால் இயல்பாக இருக்க முடியவில்லை. இதையடுத்து உடனடியாக அவர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். எய்ம்ஸ் மருத்துவமனையில் இதயவியல் துறை பிரிவில் ஜெகதீப் தன்கர் அனுமதிக்கப்பட்டார். அங்குள்ள Critical Care Unit பிரிவில் ஜெகதீப் தன்கர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதயவியல் பிரிவின் தலைவராக செயல்பட்டு வரும் டாக்டர் ராஜீவ் நாரங் தலைமையிலான மருத்துவர்கள் ஜெகதீப் தன்கருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுபற்றி எய்ம்ஸ் மருத்துவமனை சார்பில், ‛‛துணை ஜனாதிபதி நலமாக உள்ளார். அவரது உடல் சீராக உள்ளது. தொடர்ந்து டாக்டர்கள் கண்காணித்து வருகிறார்கள்'' என்று கூறிப்பட்டுள்ளது.
ஜெகதீப் தன்கரின் பின்னணியை பார்த்தால் அவர் ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனு பகுதியில் உள்ள கிதானா கிராமத்தை சேர்ந்தவர். 1951ம் ஆண்டில் பிறந்தார். ஜெய்ப்பூர் உள்ள ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்தார். அதன்பிறகு அதே பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பை முடித்தார். ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியை தொடங்கினார். மூத்த வழக்கறிஞராக செயல்பட்ட அவர் ராஜஸ்தான் பார் கவுன்சில் தலைவர் பொறுப்பையும் வகித்தார்.
அதன்பிறகு அரசியலில் நுழைந்தார். 1989 ம் ஆண்டில் ஜனதாதளம் கட்சி சார்பில் ஜுன்ஜுனு நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு எம்பியானார். அப்போதைய பிரதமர் சந்திரசேகர் அமைச்சரவையில் நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சராக செயல்பட்டார். அதன்பிறகு 1993 முதல் 1998 ம் ஆண்டு வரை ராஜஸ்தானில் உள்ள கிஷான்கார்க் சட்டசபை தொகுதியின் எம்எல்ஏவாக இருந்தார்.
பிறகு பாஜகவில் சேர்ந்தார். கடந்த 2019 ம் ஆண்டில் மேற்கு வங்க ஆளுநராக ஜெகதீப் தன்கர் நியமிக்கப்பட்டார். அப்போது ஜெகதீப் தன்கருக்கும், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டது. அதன்பிறகு கடந்த 2022ம் ஆண்டில் பாஜக கூட்டணி சார்பில் துணை ஜனாதிபதி வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து மேற்கு வங்க ஆளுநர் பதவியை ராஜினாமா செய்த ஜெகதீப் தன்கர், துணை ஜனாதிபதியானார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
