பழிபோட்ட ராகுல்! நாளை யாத்திரை புறப்படும் நாளில் திடீர் பிரஸ்மீட் அறிவித்த தேர்தல் ஆணையம்! பின்னணி
டெல்லி: இந்திய தேர்தல் ஆணையம் மீது ராகுல் காந்தி கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். குறிப்பாக பீகார் சட்டசபை தேர்தைலையொட்டி மேற்கொள்ளப்பட்ட சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தார். இந்த விவகாரத்தில் நாளை ராகுல் காந்தி பீகாரில் சிறப்பு யாத்திரை தொடங்க உள்ளார். இதற்கிடையே தான் நாளை 3 மணிக்கு பிரஸ்மீட் உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் திடீரென்று அறிவித்துள்ளது. அதன் பின்னணி குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
பீகாரில் வரும் அக்டோபர் - நவம்பர் மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலையொட்டி சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அதில் 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைக்கு தொடக்கம் முதலே காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால் தேர்தல் ஆணையம் வெற்றிகரமாக அந்த பணியை செய்து முடித்து விட்டது. மொத்தம் 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடந்துள்ளது.
இது ஒருபுறம் இருக்க ராகுல் காந்தி நாளை பீகாரில் யாத்திரை தொடங்க உள்ளார். பீகாரில் உள்ள சாசராம் பகுதியில் இருந்து கயா, முங்கர், பஹல்பூர், கதிகார், பூர்ணியா, மதுபானி, தர்பங்கா, பச்சிம் சாம்பரான் வழியாக அரா வரை ராகுல் காந்தி யாத்திரை செல்கிறார். நாளை தொடங்கும் இந்த யாத்திரை வரும் 30ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த யாத்திரைக்கு ‛வோட் அதிகார் யாத்திரை' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் ராகுல் காந்தியின் யாத்திரையின் முதல் நாளில் இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் பிரஸ்மீட் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளை டெல்லி ராய்சினா ரோட்டில் உள்ள தேசிய பத்திரிகையாளர் மையத்தில் இந்திய தேர்தல் ஆணையம் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்த உள்ளது. இந்த பத்திரிகையாளர் சந்திப்பு நாளை மாலை 3 மணிக்கு நடைபெற உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு இந்திய தேர்தல் ஆணையம் பதிலளிக்கும் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications