பல ஆயிரம் கோடிக்கு உரிமையாளர்.. துரத்தி துரத்தி கடித்த நாய்.. துடி துடித்து பலியான கோடீஸ்வரர்!
அகமதாபாத்: வாக் பக்ரி தேயிலை பிராண்டின் உரிமையாளரான, வாக் பக்ரி டீ குழுமத்தின் நிர்வாக இயக்குனரான பராக் தேசாய் 49 வயதில் இன்று காலமானார். இவருக்கு விதிஷா என்ற மனைவியும், பரிஷா என்ற மகளும் உள்ளனர்.
அக்டோபர் 15 ஆம் தேதி இவரை நாய் துரத்தி துரத்தி கடித்து உள்ளது. வாக்கிங் சென்றுவிட்டு திரும்பும் போது தெருநாய்கள் சேர்ந்து இவரை கொடூரமாக கடித்து உள்ளது. படுகாயங்களோடு துடித்த தேசாய், தன்னைத் தாக்கிய தெரு நாய்களிடமிருந்து தப்பிக்க முயன்றபோது மேலும் படுகாயம் அடைந்தார். இந்த சம்பவத்தில் அவரது வீட்டிற்கு வெளியே விழுந்து தலையில் காயம் ஏற்பட்டு உள்ளது.
இதில் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு அவர் சுருண்டு விழுந்தார் .. அங்கே இருந்த வாட்ச் மேன் ஒருவர்தான் இவரை மீட்டு வீட்டிற்குள் அழைத்து சென்றுள்ளார். தேசாய் சிகிச்சைக்காக அருகிலுள்ள ஷெல்பி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஒரு நாள் கண்காணிப்புக்குப் பிறகு அவர் அறுவை சிகிச்சைக்காக Zydus மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

ஆனால் அங்கே அவரின் உடல்நிலை மோசமானது. ஒரு பக்கம் நாய் கடி காரணமாக அவருக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டு அது ஆறாமல் இருந்தது. இன்னொரு பக்கம் தலையில் ரத்தம் உறைந்து மூளை பாதிக்கப்பட்டு இருந்தது. மூளையில் ரத்த கசிவு அவருக்கு மோசமானது. இதையடுத்து ஏழு நாட்கள் வென்டிலேட்டரில் இருந்த தேசாய் அக்டோபர் 22 அன்று அகமதாபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார் என்று அகமதாபாத் தனியார் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
யார் இவர்?: பராக் தேசாய் வாக் பிரபல பக்ரி டீ குழுமத்தின் நிர்வாக இயக்குநரான ராசேஷ் தேசாய் என்பவரின் மகன் ஆவார். 30 ஆண்டுகளுக்கும் மேலாக தொழில்முனைவோராக இருக்கிறார். இவர் தேசாய் நிறுவனத்தின் விற்பனை, சந்தைப்படுத்தல் மற்றும் ஏற்றுமதி துறைகளுக்கு தலைமை தாங்கினார். இந்நிறுவனம் ₹1,500 கோடிக்கு மேல் கடந்த வருடம் வருவாய் ஈட்டியது.
முன்னணி தொழில்துறை நிர்வாகி மற்றும் செழிப்பான தேயிலை விற்பனையாளர் என்ற பெயர் பெற்றவர் இவர்.
முக்கியமான நபர்: 1990 களில் அவரது உறவினர் பராஸுடன், பராக் குடும்ப பிஸ்னசில் ஐவரும் சேர்ந்தார். தேசாய் அமெரிக்காவில் உள்ள லாங் ஐலேண்ட் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தேசாய் குழுமத்தின் ஏற்றுமதி, சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனைத் துறைகளை மேற்பார்வையிட்டார் . தேயிலை துறையில் மிக முக்கியமான நபராக இவர் கருதப்படுகிறார்.
Federation of Indian Industry என்ற மிகப்பெரிய குழுவில் முக்கியமான உறுப்பினராகவும் இவர் இருந்துள்ளார். இந்தியாவில் நாய்க்கடி மூலம் பலியாகும் நபர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
உலகிலேயே தெருநாய்களின் தாக்குதல்களில் இந்தியாவே முதலிடத்தில் உள்ளது. இந்திய நகரங்களில், தெருநாய் தாக்குதல் குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கு ஆபத்தாக கருதப்படுகிறது. உலகில் ரேபிஸ் இறப்புகளில் 36% இந்தியாவில் உள்ளது. உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான தெருநாய்களைக் கொண்ட நாடாக இந்தியாவும், ரேபிஸ் இறப்புகளின் எண்ணிக்கையும் அதிகம். இதில் தமிழ்நாட்டில்தான் வருடத்திற்கு 1100க்கும் அதிகமான வெறிநாய் தாக்குதல்கள் நடக்கின்றன.












Click it and Unblock the Notifications