ஷியா முதல் சன்னி வரை.. வக்பு வாரியத்தில் யாருக்கெல்லாம் இடம்? விளக்கிய மத்திய அமைச்சர்
டெல்லி: எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு நடுவே இன்று நாடாளுமன்றத்தில் வக்ஃபு சட்ட திருத்த மசோதா என்பது தாக்கல் செய்யப்பட்டது. இந்த வக்ஃபு சட்ட திருத்த மசோதா மூலம் வக்ஃபு வாரியத்தில் யாருக்கெல்லாம் இடம் அளிக்கப்படும் என்பது பற்றி மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜூஜூ விளக்கம் அளித்தார்.
காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி உள்பட பல்வேறு எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு நடுவே இன்று நாடாளுமன்றத்தில் லோக்சபாவில் வக்ஃபு வாரிய சட்ட திருத்த மசோதா என்பது தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜூஜூ தாக்கல் செய்தார்.

அதன்பிறகு வக்ஃபு வாரிய சட்ட திருத்த மசோதா மீதான விவாதம் தொடங்கியது. முன்னதாக மசோதாவை தாக்கல் செய்த பிறகு கிரண் ரிஜூஜூ பேசினார். அப்போது மசோதா கொண்டு வரப்பட்ட நோக்கம், அதன் பின்னணி குறித்த விபரங்களை அவர் தெரிவித்தார். இதுதொடர்பாக கிரண் ரிஜூஜூ கூறியதாவது:
வக்ஃபு சட்ட திருத்த மசோதா என்பது இஸ்லாமியர்களின் மத நம்பிக்கையில் ஒருபோதும் தலையிடாது. இது வக்ஃபு வாரிய சொத்துகளை நிர்வகிப்பது தொடர்பான அம்சங்களை மட்டுமே கொண்டது. வக்ஃபு வாரியத்தில் ஷியா, சன்னி, போக்ரா, பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்கள், பெண்கள் மற்றும் இஸ்லாமியர் அல்லாத எக்ஸ்பர்ட்ஸ் உள்ளிட்டவர்கள் இடம்பெறுவார்கள்.
இந்த மசோதாவை ஆதரிப்பவர்களும், எதிர்ப்பவர்களும் நீண்டகாலம் நினைவில் வைத்து கொள்ளப்படுவார்கள். வக்ஃபு சொத்துகளால் இப்போது ஏழை இஸ்லாமியர்களுக்கு பயன் என்பது இல்லாமல் உள்ளது. வக்ஃபு சொத்துகள் ஏழை இஸ்லாமியர்களுக்காக பயன்படுத்தப்பட வேண்டும். அவர்களை இப்போது இருக்கும் நிலைமையிலேயே விட்டுவிட முடியாது. வக்ஃபு சட்ட திருத்த மசோதா என்பது வருங்காலத்துக்கு ஏற்றது போல் கொண்டு வரப்பட்டுள்ளது. இது பின்னோக்கிய சிந்தனை கொண்டது இல்லை.
அதேபோல் இந்த வக்ஃபு சட்டத்திருத்த மசோதா மூலம் முஸ்லிம்களின் எந்த சொத்தையும் யாரும் அபகரிக்கவில்லை என்பதை நான் தெளிவுப்படுத்துகிறேன். அதேபோல் இந்த சட்ட திருத்த மசோதாவால் வக்ஃபு வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட சொத்துகளில் ஒருபோதும் தலையிட முடியாது. ஆனால் காங்கிரஸ் கட்சி அரசுக்கு சொந்தமான 123 சொத்துகளை வக்ஃபு வாரியத்துக்கு வழங்கி உள்ளது.
வக்ஃபு சொத்துகளை ஏன் ஏழை இஸ்லாமியர்களை வாழ்வை மேம்படுத்த பயன்படுத்தப்படவில்லை? மோடி அரசு அவர்களுக்கு ஏதாவது செய்தால் நீங்கள் ஏன் எதிர்ப்பு தெரிவிப்பீர்களா?. என்னை பார்க்க வந்த இஸ்லாமிய பிரதிநிதிகள் இந்த மசோதாவை வரவேற்கிறார்கள். ஏழை முஸ்லிம்கள் மசோதாவை விரைவில் நிறைவேற்ற வேண்டும் என்று விரும்புகிறார்கள். எதிர்க்கட்சிகள் அரசியல் மற்றும் வாக்கு வங்கிக்காக இதனை எதிர்க்கிறது'' என்று கூறினார்.












Click it and Unblock the Notifications