ED ரெய்டில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் ஓகே.. ஆனா அதை என்ன செய்வாங்க தெரியுமா? இதுல இவ்வளவு இருக்கா
டெல்லி: அமலாக்கத் துறை ரெய்டின் போது கைப்பற்றும் பணம் மற்றும் தங்கம், வெள்ளி உள்ளிட்ட ஆபரணங்கள் கைப்பற்றப்படுவதாகச் செய்திகளை நாம் படித்திருப்போம். அப்படிக் கைப்பற்றப்படும் பொருட்களுக்கு என்ன ஆகும் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
இப்போதெல்லாம் அமலாக்கத் துறை அந்த அரசியல்வாதி வீட்டில் ரெய்டு.. இந்த அரசியல்வாதி வீட்டில் ரெய்டு என நாம் தொடர்ச்சியாகப் பல செய்திகளைப் பார்த்து வருகிறோம்.

மேலும், ரெய்டில் பல கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளதாக எல்லாம் செய்திகள் வெளியாகின்றன. ஆனால், இதுபோல கைப்பற்றப்படும் பணம் எங்கே செல்லும் என்ற தகவல் பலருக்கும் தெரியாது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
ரெய்டு: நமது நாட்டில் பொருளாதார குற்றங்கள், பண மோசடி, ஊழல் குற்றச்சாட்டுகளை பொதுவாக அமலாக்கத் துறை தான் விசாரித்து வருகிறது. இதுபோன்ற நேரங்களில் அமலாக்கத் துறை அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் வீடுகளில் அதிரடியாக ரெய்டு நடத்தி பணம், நகை உள்ளிட்டவற்றை கைப்பற்றும். இதுபோல ரெய்டு சமயங்களில் கைப்பற்றப்படும் ரொக்கம் என்னவாகும் என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். இதற்கான பதிலை நாம் பார்க்கலாம்.
ரூல்ஸ்படி அமலாக்க துறையால் ரெய்டு நடத்தி பணத்தைப் பறிமுதல் செய்ய அதிகாரம் உள்ளது. ஆனால், மீட்கப்பட்ட பணத்தை வைத்திருக்க அமலாக்கத் துறைக்கு அதிகாரம் இல்லை.. எனவே, கைப்பற்றப்பட்ட பணத்தை அமலாக்கத் துறை ரிசர்வ் வங்கி அல்லது பாரத ஸ்டேட் வங்கியில் அரசின் வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்ய வேண்டும்.
பஞ்சநாமா: அமலாக்கத் துறை பொதுவாக ஒருவரது வீட்டில் ரெய்டு நடத்தினால்.. அங்கு உள்ள அனைத்துப் பொருட்களையும் லிஸ்ட் போடுவார்கள். இதை பஞ்சநாமா என்பார்கள். பஞ்சநாமா என்பது குற்றம் நடந்த இடத்தில் ஒரு அதிகாரி என்ன பொருட்களை எல்லாம் கைப்பற்றினார் என்பதைப் பதிவு செய்யும் சட்டப்பூர்வமான ஒரு ஆவணம் ஆகும். இந்த ஆவணத்தில் அசையும் (வாகனங்கள், நகைகள் போன்ற சொத்துக்கள்) மற்றும் அசையா (வீடு, அலுவலகம்) சொத்துக்கள் என இரண்டும் இருக்கும்.
இப்படி எல்லாவற்றையும் லிஸ்ட்டாக போடுவார்கள்.. இந்த விரிவான பட்டியல் ரெடியாக பிறகு யாருடைய வளாகத்தில் சோதனை நடத்தப்பட்டதோ அந்த நபரின் கையெழுத்து பஞ்சநாமாவில் பெறப்படும்.
வாகனங்கள்: சோதனையின் போது இந்த பஞ்சநாமாவில் இணைக்கப்பட்டுள்ள வாகனங்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் கிடங்கிற்கு அனுப்பப்படும். அதற்கான கட்டணத்தை அமலாக்கத் துறை செலுத்திவிடும்.. பறிமுதல் செய்யப்பட்ட வாகனம் சேதமடையாமல் இருக்க இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பறிமுதல் செய்யப்பட்டு 180 நாட்களுக்கு இதே நடைமுறை பின்பற்றலாம்.
சட்டம்: இந்தக் காலகட்டத்தில் அமலாக்கத் துறை சம்பந்தப்பட்ட நபரைக் கைது செய்தால்.. வழக்குப் பதிவு செய்ய அமலாக்கத் துறைக்கு 60 நாட்கள் அவகாசம் கிடைக்கும். PMLA எனப்படும் பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டால் ஏழு ஆண்டுகள் வரை ஒருவருக்குத் தண்டனை கிடைக்கும்.
இதில் மற்றொரு முக்கியமான அம்சம் என்னவென்றால், அந்நியச் செலாவணி சட்டம் (FEMA) மற்றும் PMLA ஆகிய இரண்டும் இந்தியா முழுமைக்கும் பொருந்தும். எனவே, இந்தியாவில் இருக்கும் எந்தவொரு நபர் மீதும் அமலாக்கத் துறையால் நடவடிக்கை எடுக்க முடியும்.












Click it and Unblock the Notifications