திரிபுராவில் திருப்பம்.. மேகாலயாவில் பரிதாப நிலையில் பாஜக! நாகலாந்தில் தாமரை கூட்டணி மலர வாய்ப்பு
மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா மாநிலங்களில் யார் யாருக்கு இடையே போட்டி நிலவுகிறது என்பதை பார்ப்போம்
டெல்லி: வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து சட்டசபைத் தேர்தல்கள் நடந்து முடிந்து பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் முடிவுகளின் படி எந்த மாநிலங்களில் யார் ஆட்சியமைக்க வாய்ப்பு உள்ளது என்பதை பார்ப்போம்.
கடந்த பிப்ரவரி மாதம் 16 ஆம் தேதி வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. அதை தொடர்ந்து மேகாலயா மற்றும் நாகாலாந்து ஆகிய வடகிழக்கு மாநிலங்களில் கடந்த 27 ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது.
இந்த நிலையில் இன்று காலை 8 மணிக்கு 3 மாநிலங்களிலும் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கி உள்ளது. வாக்கு எண்ணும் மையங்களில் காவல்துறை மற்றும் துணை ராணுவ பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது. ஸ்டிராங் ரூம்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஆட்சியமைப்பது யார்?
தபால் வாக்குகள் முதலில் எண்ணப்பட்ட பிறகு நேரடி வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. பொதுவாகவே வட மாநிலங்கள், தென் மாநிலங்களின் தேர்தல் அளவுக்கு வடகிழக்கு மாநிலங்களின் தேர்தல்கள் பிற மாநில மக்களால் பெரிய அளவில் கவனிக்கப்படாமல் உள்ளன. இந்த நிலையில் 3 மாநிலங்களிலும் எந்த கட்சி ஆட்சியமைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என அலசுவோம்.

நாகாலாந்து
நாகலாந்து மாநிலம் மொத்தம் 60 தொகுதிகளை கொண்டது. அங்கு பாஜக - தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி ஆட்சி தொடர்ந்து வரும் நிலையில் மீண்டும் பாஜக - என்டிபிபி கூட்டணி அமைத்து போட்டியிட்டன. அந்த கூட்டணி 33 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. 3 இடங்களில் வென்றுள்ளது. தேசிய மக்கள் கட்சி 3 இடங்கள், நாகா மக்கள் முன்னணி, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் 2 தலா இடங்களில் முன்னிலை வகிக்கின்றன. இந்த தேர்தலில் தனித்து போட்டியிட்டு இருக்கின்றன. இதன் மூலம் அங்கு மீண்டும் பாஜக கூட்டணி அமைப்பது ஏறக்குறைய உறுதியாகி உள்ளது.

மேகாலயா
60 தொகுதிகளை உள்ளடக்கிய மேகாலயா மாநிலத்தில் கடந்த முறை பாஜக மற்றும் தேசிய மக்கள் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிட்டு வெற்றிபெற்றன. ஆனால், இரு கட்சிகளிடையே ஏற்பட்ட மோதலால் ஆளும் கூட்டணியில் இருந்து பாஜக விலகியது. எனவே ஆளும் என்பிபி மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் தனித்து போட்டியிட்டன. தற்போது மீண்டும் என்பிபி 26 இடங்களில் முன்னிலை வகித்துள்ளது. 7 இடங்களில் திரிணாமூல் காங்கிரஸும், காங்கிரஸ் மற்றும் பாஜக தலா 4 இடங்களில் முன்னிலையில் உள்ளன. எனவே தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி மூலம் மீண்டும் என்பிபி ஆட்சியை தக்க வைக்கலாம்.

திரிபுரா
திரிபுரா மாநிலத்தில் 60 தொகுதிகளில் ஆளும் பாஜக சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. தற்போது அக்கட்சி 30 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. அம்மாநிலத்தில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, ஆர்.எஸ்.பி, உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு 16 இடங்களிலும், திரிப்தா மோர்சா 10 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. இதே நிலை தொடர்ந்தால் பாஜக ஆட்சியமைக்கும். பாஜக முன்னிலை குறைந்தால் இடதுசாரி, காங்கிரஸ், திரிணாமூல், திரிப்தா மோர்சா தேர்தலுக்கு பின் கூட்டணி அமைத்தால் ஆட்சியமைக்கலாம்.












Click it and Unblock the Notifications