முதலில் டாடா சன்ஸ் தலைவர்.. பின் அந்த நிறுவனத்திற்கு எதிராகவே வழக்கு.. யார் இந்த சைரஸ் மிஸ்திரி!
டெல்லி: டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் செயல் தலைவர் சைரஸ் மிஸ்திரி இன்று கார் விபத்தில் உயிரிழந்தார்.
டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவராக இருந்தவர் சைரஸ் மிஸ்திரி. இவர் கடந்த 2012 முதல் 2016ஆம் ஆண்டு வரை டாடா குழுமத்தின் தலைவராக இருந்தார்.
மகாராஷ்டிராவில் இன்று இவர் பயணித்த கார், விபத்து ஒன்றில் சிக்கியது. இந்த மோசமான விபத்தில் 54 வயதான சைரஸ் மிஸ்திரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

விபத்து
இன்று ஞாயிற்றுக்கிழமை சைரஸ் மிஸ்திரி உட்பட நான்கு பேர் காரில் பயணித்துக் கொண்டு இருந்தனர். அப்போது மும்பை அருகே உள்ள பால்கர் மாவட்டத்தில் அவர்கள் சென்று கொண்டு இருந்த போது அவர்கள் கார் விபத்தில் சிக்கியது. இதில் சைரஸ் மிஸ்திரி உட்பட இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த மற்ற இருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

சைரஸ் மிஸ்திரி
சைரஸ் மிஸ்திரி மரணத்திற்குப் பிரதமர் மோடி தொடங்கி பல்வேறு முக்கிய பிரமுகர்களும் இரங்கல் தெரிவித்து உள்ளனர். யார் இந்த சைரஸ் மிஸ்திரி எனப் பார்க்கலாம். புகழ்பெற்ற கட்டுமான தொழிலதிபரான பல்லோன்ஜி மிஸ்திரியின் மகன் தான் சைரஸ் மிஸ்திரி. இவர்கள் குடும்பம் சுமார் 100 ஆண்டுகளுக்கு மேலாகவே பல்வேறு தொழில்களை, குறிப்பாகக் கட்டுமானத்தில் ஈடுபட்டு உள்ளது.

மகாராஷ்டிரா
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பிறந்த சைரஸ் மிஸ்திரி, அயர்லாந்தில் செட்டிலாகி விட்டார். அங்கு மிக முக்கிய தொழில் அதிபர்களில் ஒருவர் சைரஸ் மிஸ்திரி ஆவர். 1930களில் மிஸ்திரியின் தாத்தா ஷபூர்ஜி மிஸ்திரி முதன்முதலில் டாடா சன்ஸ் நிறுவனத்தின் பங்குகளை வாங்கினார். அதன் பின்னர் தொடர்ச்சியாக டாடா சன்ஸ் பங்குகளை வாங்கி உள்ளனர்.

டாடா சன்ஸ்
ஒரு கட்டத்தில் அவர் தனது சைரஸ் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனம் மூலம் டாடா சன்ஸ் நிறுவனத்தின் 18.4 சதவீத பங்குகளை வைத்திருந்தார். 2018இல், அவரது நிகர மதிப்பு சுமார் $10 பில்லியன் ஆகும். இதற்கிடையே அவர் 2012 இல் டாடா குழுமத்தின் 6ஆவது தலைவராக நியமிக்கப்பட்டார். 4 ஆண்டுகள் மட்டுமே அந்த பதவியில் இருந்த அவர், பல சர்ச்சைகளில் சிக்கினார். கடந்த அக்டோபர் 2016இல் சைரஸ் மிஸ்திரி டாடா குழுமத்தின் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

வழக்கு
அவர் தலைவராக இருந்த சமயத்தில் பல சர்ச்சை முடிவுகளை எடுத்ததால் அவரை ராஜினாமா செய்யுமாறு கேட்டுக் கொண்டனர். இருப்பினும், இதற்கு அவர் மறுத்த நிலையில், அக்டோபர் 2016இல் அவர் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இருப்பினும், இருப்பினும், இதை எதிர்த்து சைரஸ் மிஸ்திரி தொடர்ந்த வழக்கு சுமார் 5 ஆண்டுகள் நடந்தது.

உருக்கம்
அப்போது உச்ச நீதிமன்றத்தில் அவர் மிகவும் உருக்கமான வாக்குமூலம் ஒன்றை அளித்து இருந்தார். "டாடா சன்ஸ் நிறுவனத்தின் செயல் தலைவராக நான் இருந்த காலத்தில், இந்தியாவை உலக நாடுகளுடன் போட்டிப் போடும் வகையில் சிறந்த வாய்ப்புகளைத் தரும் சந்தையாக உருவாக்குவதே எனது கடமையாக இருந்தது. அதற்குத் தேவையான நடவடிக்கையையே நான் எடுத்தேன்" என்று கூறி இருந்தார்.












Click it and Unblock the Notifications