காங்கிரஸ் ஆதரவுடன் களமிறங்கியுள்ள ஆம் ஆத்மி! பாஜகவை வீழ்த்துமா? கிழக்கு டெல்லி கள நிலவரம்
டெல்லி: லோக்சபா தேர்தலை பொறுத்த அளவில் டெல்லி மிக முக்கியமானதாகும். எனவே, வழக்கம் போல இந்த முறையும் டெல்லியை யார் கைப்பற்றுவது என்கிற போட்டி தீவிரமடைந்துள்ளது. இந்த செய்தி கிழக்கு டெல்லி குறித்து விரிவாக அலசுகிறது.
கிழக்கு டெல்லி: டெல்லியில் உள்ள மொத்தம் 7 தொகுதிகளில் கிழக்கு டெல்லியும் ஒன்று. 1966ம் ஆண்டு இந்த தொகுதி உருவாக்கப்பட்டது. இங்கு மொத்தம் 25 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். இதில் 16 லட்சம் பேர் வாக்காளர்களாக இருக்கின்றனர். இந்த தொகுதி 40 மாநகராட்சி வார்டுகளை கொண்டிருக்கிறது. நாட்டில் அதிக மக்கள் தொகை கொண்ட தொகுதிகளில் கிழக்கு டெல்லியும் ஒன்றாகும். இந்த தொகுதியில் உ.பியின் புலம் பெயர் மக்களின் ஆதிக்கம் அதிகம் இருந்தாலும், சொல்லிக்கொள்ளும் அளவுக்கு 'தியாகி' சமூக மக்களின் ஆதிக்கமும் இருக்கிறது.

தேர்தல் வரலாறு: கிழக்கு டெல்லி லோக்சபா தொகுதி, கடந்த 1967ம் ஆண்டு தொடங்கி 2019ம் வரை 15 முறை தேர்தலை சந்தித்திருக்கிறது. இதில் 8 முறை பாஜகவும், 4 முறை காங்கிரசும் வெற்றி பெற்றிருக்கிறது. குறிப்பாக கடந்த 2014க்கு பின்னர் இரண்டு முறை பாஜக இங்கு வெற்றி பெற்றிருக்கிறது.
தொகுதி பிரச்னை: இங்கு புலம் பெயர் தொழிலாளர்கள் அதிக அளவில் குடியேறுவதால் அவர்களுக்கான வாழ்விடம் என்பது கேள்விக்குறியாகியுள்ளது. அதேபோல கழிவு மேலான்மை கிழக்கு டெல்லியின் நீண்ட கால கோரிக்கை. கழிவுகளை நகரிலிருந்து முறையாக அப்புறப்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. மேலும் பெண்களின் பாதுகாப்பு, குழந்தைகளுக்கான கல்வி உள்ளிட்டவை பெரும் பிரச்னையாக இருக்கிறது.
கடந்த 2 தேர்தல்கள்: 2014ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாஜக vs காங்கிரஸ் vs ஆம் ஆத்மி என மூன்று முணை போட்டி நிலவியது. பாஜக சார்பில், மகேஷ் கிரி போட்டியிட்டார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித்தின் மகன் சந்தீப் தீட்சித் போட்டியிட்டார். அதேபோல ஆம் ஆத்மி சார்பில் காந்தியின் கொள்ளுபேரனான ராஜ்மோகன் காந்தி போட்டியிட்டார். இதில் காங்கிரஸ் 16.99%, ஆம் ஆத்மி 31.91% வாக்குகளை பெற்று தோல்வியடைந்தது. ஆனால் பாஜக 47.83% வாக்குகளை பெற்று வெற்றி பெற்றது.
அதேபோல 2019ம் ஆண்டு தேர்தலில் பாஜக சார்பில் பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் களமிறக்கப்பட்டார். 2014 தேர்தலில் செய்த அதே தவறை காங்கிரசும், பாஜகவும் இந்த தேர்தலிலும் செய்தன. அதாவது, இரண்டு கட்சிகளும் தனித்தனியாக போட்டியிட்டன. இதனால் வாக்குகள் பிரிந்து மொத்தமாக பாஜகவுக்கு குவிந்தது. இறுதியில் 55.35% வாக்குகளுடன் பாஜக வெற்றி பெற்றது.
2024 வேட்பாளர்: இந்த ஆண்டு காங்கிரசுடன் ஆம் ஆத்மி கைகோர்த்திருப்பதால் தொகுதி பங்கீட்டில் உடன்பாடு எட்டப்பட்டிருக்கிறது. அதன்படி கிழக்கு டெல்லியில் ஆம் ஆத்மி போட்டியிடுகிறது. ஆம் ஆத்மி சார்பாக குல்தீப் குமார் போட்டியிடுகிறார். இவர் அரசியல் பின்புலம் இல்லாத சாதாரண குடும்பத்திலிருந்து அரசியலுக்கு வந்திருக்கிறார். தனது 18 வயதில் கிழக்கு டெல்லியில் அம்பேத்கர் இயக்கத்தை கொண்டு சென்றிருக்கிறார்.
ஆம் ஆத்மி வேட்பாளர்: தந்தை டெல்லி மாநகராட்சியின் தூய்மை பணியார், தாய் அன்றாம் கூலி தொழிலாளி. எனவே வறுமையும், கஷ்டங்களும் நிறைந்த சூழலிலிருந்து வாழ்க்கை புரிந்துக்கொண்டு அரசியலுக்கு வந்திருக்கிறார். கெஜ்ரிவால் மீது கொண்ட ஈர்ப்பு காரணமாக ஆம் ஆத்மிக்கு வந்த அவர், கோண்ட்லி தொகுதியில் அக்கட்சி சார்பில் எம்எல்ஏவாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதேநேரம், இவர் எம்எல்ஏ ஆன பின்னரும் கூட இவரது தந்தை தூய்மை பணியை விடவில்லை. அரசியல் சம்பாதிப்பதற்கு அல்ல என்பது இவரது முழக்கங்களில் முக்கியமானதாகும்.
பாஜக வேட்பாளர்: பாஜக சார்பில் கிழக்கு டெல்லியின் முன்னாள் மேயரான ஹர்ஷ் மல்ஹோத்ரா போட்டியிடுகிறார். டெல்லி பாஜகவின் மூன்று பொதுச் செயலாளர்களில் இவரும் ஒருவர். பிஎஸ்சி பட்டதாரியான இவர், கடந்த 2012ல் கவுன்சிலராகவும், 2015ல் கிழக்கு டெல்லி மாநகராட்சியின் மேயராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அதேபோல கிழக்கு டெல்லி மாநகராட்சியின் கல்வி குழு தலைவராகவும் இவர் பணியாற்றியிருக்கிறார். அடிப்படையில் பஞ்சாபி சமூகத்தை சேர்ந்த இவர் கிழக்கு டெல்லியில் பரவலாக அறியப்பட்டிருக்கிறார்.
வெற்றி வாய்ப்பு: இந்த முறையும் கிழக்கு டெல்லியை பாஜக தக்கவைக்கும் என்று தேர்தல் கருத்துகணிப்புகள் தெரிவிக்கின்றன. இருப்பினும் அரவிந்த் கெஜ்ரிவால் கைது, ஆம் ஆத்மி தலைவர்கள் மீதான விசாரணை போன்றவை ஆம் ஆத்மிக்கு சாதகமாக இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications