பயணிகளே உஷார்.. பெண்ணின் உயிரை பறித்த மெட்ரோ ரயில்.. கதவில் சிக்கிய சேலையால் அனாதையான 2 குழந்தைகள்
டெல்லி: மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பயணிகளே உஷார்.. டெல்லியில் பெண் ஒருவரின் சேலை மெட்ரோ ரயிலின் கதவில் சிக்கிய நிலையில் அவர் சிறிது தூரம் இழுத்து செல்லப்பட்டு ரயிலின் அடியில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
டெல்லியில் மெட்ரோ ரயில் சேவை உள்ளது. போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் மெட்ரோ ரயிலில் வேகமாக செல்ல முடியும் என்பதால் நாள்தோறும் மெட்ரோ ரயிலில் ஏராளமானவர்கள் சென்று வருகின்றனர்.

இந்நிலையில் தான் டெல்லி மெட்ரோ ரயில் கதவில் சிக்கிய சேலையால் பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் அவரது 2 குழந்தைகள் அனாதையாகி உள்ளனர். இந்த துயர சம்பவம் குறித்த விபரம் வருமாறு:
மேற்கு டெல்லியில் உள்ள நாங்லோய் பகுதியை சேர்ந்தவர் ரீனா. இவருக்கு 13 வயதில் மகளும், 11 வயதில் மகனும் உள்ளனர். ரீனாவின் கணவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போனார். மூளையில் ஏற்பட்ட கட்டியால் அவரது கணவரின் உயிர் பிரிந்தது. இதனால் ரீனா காய்கறி வியாபாரம் செய்து தனது மகன், மகள்களை வளர்த்து வந்தார்.
இந்நிலையில் தான் கடந்த 14ம் தேதி ரீனா தனது மகனுடன் டெல்லி மெட்ரோவில் பயணம் செய்ய சென்றார். இன்டர்லாக் ஸ்டேஷனில் அவர் மெட்ரோ ரயிலில் ஏற முயன்றார். ஆனால் அதற்குள் ரயிலின் கதவு மூடப்பட்டது. அப்போது அவரது சேலை என்பது மெட்ரோ ரயிலின் கதவுக்குள் சிக்கியது. இதையடுத்து ரயில் புறப்பட்டது.
ரயிலின் கதவில் சேலை சிக்கியதால் அவர் நடைமேடையில் விழுந்த நிலையில் இழுத்து செல்லப்பபட்டார். இதனை பார்த்த அவரது மகன் மற்றும் பயணிகள் அலறினர். மெட்ரோ ரயிலை நிறுத்தும்படி கூறினர். ஆனால் மெட்ரோ ரயில் நிற்கவில்லை. இதனால் சுமார் 25 மீட்டர் தூரத்துக்கு இழுத்து செல்லப்பட்ட ரீனா மெட்ரோ ரயிலின் அடியில் சிக்கி படுகாயமடைந்தார்.
இதையடுத்து அவர் மீட்கப்பட்டு சப்தர்சுங்க் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் தான் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். ஏற்கனவே அவரது கணவர் காலமான நிலையில் ரீனாவின் மகனும், மகளும் அனாதையாகி உள்ளனர்.












Click it and Unblock the Notifications