விவசாய கடனை தள்ளுபடி செய்யும் வரை மோடியை தூங்க விடமாட்டோம்.. ராகுல் காந்தி சூளுரை
டெல்லி: விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யும் வரை பிரதமர் மோடியை தூங்க விட மாட்டோம் என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.
நாடாளுமன்ற வளாகத்தில் இன்று மதியம் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி மேலும் கூறியதாவது:
விவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் மற்றும் அனைத்து எதிர்க்கட்சிகளும் பிரதமர் மோடியை வற்புறுத்துவோம். விவசாய கடனை தள்ளுபடி செய்யும் வரை அவரை தூங்க விட மாட்டோம்.

மோடிக்கு இரு வாய்ப்புகள் இருந்தன. அதில் ஒன்று பணமதிப்பிழப்பு அறிவிப்பு, மற்றொன்று விவசாய கடன் தள்ளுபடி. ஆனால், பணமதிப்பிழப்பு நடவடிக்கையை கையிலெடுத்த மோடி, அதில் கிடைத்த பணத்தை தனது தொழிலதிபர் நண்பர்களுக்கு கொடுத்துவிட்டார்.
காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்த இரு மாநிலங்களில் 6 மணி நேரத்திற்குள்ளாக விவசாய கடனை தள்ளுபடி செய்யும் உத்தரவை பிறப்பித்துள்ளோம். மற்றொரு மாநிலத்திலும் விரைவில் அறிவிப்பு வெளியாக உள்ளது.
ஆனால், மோடி ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகளாகியும் இன்னும் விவசாய கடன் தள்ளுபடி குறித்து அறிவிக்கவில்லை. எதற்காக பிரதமர் பயந்து ஓடுகிறார்? அவர் நாடாளுமன்றம் வந்து அது குறித்து எங்களிடம் பேசவேண்டும். எதற்காக விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்யவில்லை என்று எங்களிடம் காரணம் கூறியாக வேண்டும்.
மத்திய அரசு விவசாய கடனை ரத்து செய்யாவிட்டால், அடுத்த தேர்தலில் வெற்றி பெற்றதும் காங்கிரஸ் அரசு அதை செய்யும். இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications