ஒவ்வொரு வாக்கும் முக்கியம்! சாதனை அளவை எட்டும் வகையில் வாக்களியுங்கள்! பிரதமர் மோடி தமிழில் கோரிக்கை
டெல்லி: நாடு முழுவதும் 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்து வருகிறது. இந்த நிலையில், பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் தமிழில் ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளார். அதில், ஒவ்வொரு வாக்கும், ஒவ்வொரு குரலும் முக்கியமானது. இந்த முறை சாதனை எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி தமிழில் பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள 39 லோக்சபா தொகுதிகள் உள்பட மொத்தம் 102 லோக்சபா தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கி நடந்து வருகிறது. தமிழகத்தில் காலை 6. 30 மணியில் இருந்தே வாக்காளர்கள் காத்திருந்து ஓட்டு போட்டு வருகின்றனர். தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, நடிகர் அஜித், அமைச்சர் கே என் நேரு, சவுமியா அன்புமணி, ப சிதம்பரம், தமிழிசை சவுந்தரராஜன் என பலரும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதும் வாக்களித்துவிட்டனர்.

காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் அதற்கு முன்பாகவே பலரும் வாக்குச்சாவடிக்கு வந்து காத்திருந்து தங்களது ஜனநாயக கடமையையாற்றினர். இந்த நிலையில் பிரதமர் மோடி, அனைத்து வாக்காளர்களும் வாக்களிக்க வேண்டும் என்று தமிழில் ட்வீட் போட்டுள்ளார். தனது எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி கூறியிருப்பதாவது:-
"2024 மக்களவைத் தேர்தல் இன்று தொடங்குகிறது! 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், இந்தத் தொகுதிகளில் வாக்களிக்கும் அனைவரும் சாதனை அளவை எட்டும் வகையில் தங்களது வாக்குரிமையை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.
குறிப்பாக இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். ஏனென்றால், ஒவ்வொரு வாக்கும் ஒவ்வொரு குரலும் முக்கியமானது!" இவ்வாறு பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.
வழக்கமாக பிரதமர் மோடி தமிழ்நாடு வருகையின் போதோ இல்லை தமிழ் பற்றிய அறிவிப்புக்கோ தான் தமிழில் ட்வீட் பதிவில் பதிவிடுவார். ஆனால் இன்று 102 லோக்சபா தொகுதிகளில் தேர்தல் நடக்கும் நிலையில், பிரதமர் மோடி தமிழில் ட்வீட் பதிவிட்டுள்ளது கவனிக்கும் வகையில் உள்ளது.

இன்று வாக்குப்பதிவு நடந்துவரும் 102 லோக்சபா தொகுதிகளில் கடந்த ஒரு மாதமாக கொளுத்தும் வெயிலுக்கு மத்தியிலும் தேர்தல் பிரசாரம் அனல் பறந்தது. தேசிய மற்றும் மாநில கட்சி தலைவர்கள் சூறாவளியாக சுழன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இதனால் கடந்த ஒரு மாத காலம் தேர்தல் களம் அனல் பறந்தது.
இதனைத்தொடர்ந்து இந்த 102 தொகுதிகளிலும் இன்று வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கியுள்ள நிலையில், வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைகிறது. அருணாசல பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் 5 மணிக்கு வாக்குப்பதிவு முடிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இன்று தொடங்கியிருக்கும் 102 தொகுதிகளுக்கான லோக்சபா தேர்தல் மற்றும் சிக்கிம், அருணாசலபிரதேசம் ஆகிய 2 மாநில சட்டசபை தேர்தலுக்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.












Click it and Unblock the Notifications