தர்மபுரி அருகே எந்த போலீசும் செய்ய துணியாத காரியம்.. ஜெயில் காவலருக்கு மறக்க முடியாத பாடம்
தர்மபுரி: தர்மபுரி அருகே சிறை காவலர் சக்திக்கு ரூ.10 லட்சம் கடன் இருந்தது.. அந்த கடனை அடைக்க முடியாமல் அவதிப்பட்டு வந்த அவர், அதற்காக எந்த போலீசும் செய்ய துணியாத காரியத்தை செய்திருக்கிறார் என்று புகார் எழுந்துள்ளது. அப்படி செய்த காரணத்தால், அவரது கடன் பிரச்சனை தீர்ந்ததா என்றால் இல்லை... மாறாக அவருக்கு திருடன் என்ற பட்டமும், பணியிடை நீக்கமும் செய்யப்பட்டுள்ளார்.. என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
கடந்த செப்டம்பர் 27ம் தேதி தர்மபுரி செல்லியம்பட்டி பகுதியில் ஒரு வீட்டின் பூட்டை உடைத்து, திடீரென 2 பேர் உள்ளே நுழைந்தனர். அந்த நேரம் பார்த்து, அந்த வீட்டின் உரிமையாளர் அங்கு வந்தார். அங்கு அவரை பார்த்த உடன், வீட்டில் நுழைந்த 2 பேரும் அங்கிருந்து தப்பி வேகமாக ஓடியுள்ளார்கள். இதை கண்ட அந்த பகுதி மக்கள், 2 பேரையும் துரத்தி சென்றனர். அப்போது ஒருவர் மட்டும் பொதுமக்களிடம் வசமாக சிக்கினார். மற்றொருவர் கண் இமைக்கும் நேரத்தில் தப்பி ஓடிவிட்டார். சிக்கிய இளைஞரை பொதுமக்கள் மதிகோன்பாளையம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர் குத்தல அள்ளியை சேர்ந்த சக்தி (வயது 30) என்பது தெரியவந்தது. இவர் என்ன வேலை செய்கிறார் என்று விசாரித்த போது தர்மபுரி கிளை சிறையில் 2-ம் நிலை காவலராக பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது. கடந்த 2 நாட்களாக விடுமுறையில் இருந்த சக்தி வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு முயற்சியில் ஈடுபட்டிருப்பது விசாரணையில் உறுதியானது. சிறை காவலர் சக்திக்கு ரூ.10 லட்சம் கடன் இருக்கிறதாம். அந்த கடனை அடைப்பதற்கான வழியை யோசித்த போதுதான், அவருக்கு இந்த விபரீத யோசனை வந்திருக்கிறது.
அதற்காக அவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு விடுமுறை எடுத்து ஊருக்கு சென்றிருக்கிறார். ஊரில் போய் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற போது பொதுமக்களிடம் சிக்கி கைதாகி உள்ளார் என்பது தெரியவந்தது. இதையடுத்த சிறை காவலர் சக்தியை அவரிடமிருந்து கையுறை மற்றும் இரும்பு ராடு ஆகியவை பறிமுதல் செய்த போலீசார், அவரை கைது செய்தனர். தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
திருட்டு முயற்சியில் ஈடுபட்டு தப்பி ஓடிய மற்றொருவரை போலீசார் தேடி வருகிறார்கள். இதனிடையே, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள 2-ம் நிலை சிறைக்காவலர் சக்தி மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. காவலர் சக்தியை நேற்று மாலை பணி இடை நீக்கம் செய்து சேலம் மத்திய சிறை துறை எஸ்பி(பொறுப்பு) வினோத் நடவடிக்கை எடுத்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications