ஆலய திருவிழாவில் ஆபாசம்..அறைகுறை ஆடையுடன் ஆட்டம்! போலீஸே வேடிக்கை பார்த்தா எப்படிங்க? கோர்ட் சொன்னது?
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் வைகாசி மாதம் கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற ஆடலும் பாடலும் நிகழ்ச்சியில் அரைகுறை ஆடையுடன் ஆபாச நடனம் அரங்கேற்றப்பட்ட சம்பவம் அங்கு கூடியிருந்த பெண்களை முகம் சுழிக்க வைக்கும் வகையில் இருந்தது.
கோவில் திருவிழாக்களில் ஆடலும் பாடலும் நிகழ்ச்சிக்கு அனுமதி இருந்தாலும் ஆபாசமாக இருக்கக் கூடாது என நீதிமன்றம் எச்சரித்திருந்த நிலையில், அதனை கட்டுப்படுத்த வேண்டிய காவல்துறை அதிகாரிகள் ஆபாச நடனத்தை வேடிக்கை பார்த்த சம்பவமும் அரங்கேறியது.

முன்பெல்லாம் தமிழகத்தில் நடைபெறும் கோவில் திருவிழாக்களில் ஊர் பொதுமக்கள் சார்பாக தமிழக பாரம்பரிய கலைகளான கரகாட்டம்,தேவராட்டம், ஒயிலாட்டம் ,மயிலாட்டம், பொய்க்கால் குதிரை, கும்மியாட்டம் மற்றும் புராண நாடகங்கள் நடத்தப்பட்டு வந்தன.
ஆடல் பாடல்: காலப்போக்கில் நாகரீகமும் மாறி 2k கிட்ஸ் இளைஞர்கள் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் கூறுவதைப் போல் இது போன்ற பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுக்கெல்லாம் கேட்டை போட்டு தற்போது கிளாமராக ஆடக்கூடிய பெண்களின் ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர்.

ஆபாச நடனம்: மேலும் சமீபத்தில் உயர்நீதிமன்ற மதுரை கிளை வெளியிட்டு இருந்த உத்தரவில் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்துவதற்கான அனுமதியை அந்தந்த பகுதியில் இருக்கக்கூடிய சம்பந்தப்பட்ட காவல்துறையினரே வழங்கலாம் என்றும் அப்படி நடத்தப்படக்கூடிய ஆடல் பாடல் நிகழ்ச்சிகளில் ஆபாச நடனங்களோ பெண்களுக்கு முகம் சுழிப்பு ஏற்படக்கூடிய வகையிலோ நடைபெறக் கூடாது என குறிப்பிட்டு இருந்தது.
கோவில் திருவிழா: இது ஒரு புறம் இருக்க நேற்று திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிலுவத்தூர் கிராமத்தில் திருவிழாவினை முன்னிட்டு மாலை 7 மணி அளவில் சிவகங்கையைச் சேர்ந்த பிஎஸ் கார்த்தி குழுவினரின் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆரம்பம் முதலே அதிகப்படியான ஒளி மற்றும் ஒளியுடன் பாட்டு இசைக்க அதற்கு ஏற்றவாறு குழுவைச் சேர்ந்த பெண்கள் மற்றும் ஆண்கள் பொதுமக்கள் மத்தியில் மேடையில் ஆட்டம் ஆடி வந்தனர். பின்னர் நேரம் ஆக ஆக அரைகுறை ஆடையுடன் பாடல்களுக்கு ஆபாச நடனம் ஆடினர்.

காவல்துறை: ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மத்தியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆடல் பாடல் நிகழ்ச்சியை காண்பதற்காக அமர்ந்த நிலையில் முகம் சுழிக்கும் வகையில் நடனமாடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது ஒரு புறம் இருக்க ஒரு படி மேலாக இதனை கட்டுப்படுத்த வேண்டிய காவல்துறை அதிகாரியும் கூட்டத்தோடு கூட்டமாக நின்று கைகட்டி ஆடல் பாடல் நிகழ்ச்சியை வேடிக்கை பார்த்த சம்பவம் வேதனையின் உச்சம் என்றே கூறலாம்.
நடவடிக்கை தேவை: மேலும் கிளாமர் டான்ஸ் என்ற பெயரில் இளைஞர்களை மாற்று வழிக்கு அழைத்துச் செல்லும் வகையில் நடத்தப்படும் இது போன்ற நிகழ்ச்சிகளால் சமுதாயம் பெரும் சீர்கேட்டை சந்தித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் உயர்நீதிமன்றம் கடுமையாக உத்தரவிட்ட போதிலும், இதை மீறி ஆபாச நடனங்கள், நிகழ்ச்சிகள் நடத்தும் குழுக்கள் மீதும், அதன் உரிமையாளர்கள் மீதும் கடும் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.













Click it and Unblock the Notifications