கலெக்டர் ஆபிஸில் கரப்ட் ஆபீசர்ஸ்..‘சோர்ஸ்’ சொன்ன தகவல்! பொறி வைத்து பிடித்த போலீசார்..இத்தனை லட்சமா?
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள உள்ளாட்சி நிதி தணிக்கை துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ்சார் அதிரடி சோதனையில், கணக்கில் வராத பணம் ஒரு லட்சத்து 57,000 ரூபாயை பறிமுதல் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் அரசு அலுவலகங்களில் லஞ்சம் தலைவிரித்து ஆடுவதாக பொதுமக்கள் அடிக்கடி குற்றம் சாட்டி வருகின்றனர். இதை அடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்துவதும் அதிகாரிகளை கைது செய்வதும் தொடர்ந்து வருகிறது.

குறிப்பாக தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் அதிகாரிகள் சட்டவிரோதமாக லஞ்ச பணத்தை வசூல் செய்வார்கள் என்பதால் அந்த நேரங்களில் பத்திர பதிவுத்துறை, போக்குவரத்து துறை, ஆர்டிஓ அலுவலகங்கள் உள்ளிட்டவைகளில் அதிரடி சோதனை நடத்துவது வழக்கம்.
அதிரடி சோதனை: அப்படி ஒரு சோதனை நேற்று இரவு திண்டுக்கல்லில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள உள்ளாட்சி நிதி தணிக்கை துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ்சார் அதிரடி சோதனை கணக்கில் வராத பணம் ஒரு லட்சத்து 57,000 பறிமுதல் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இந்த 14 ஊராட்சி ஒன்றியங்களில் கட்டுப்பாட்டில் 306 கிராம ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் கிராம ஊராட்சிகளின் வருடாந்திர கணக்கு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

தணிக்கைக்கு லஞ்சம்: இந்த பணியில் தணிக்கை குழு கடந்த இரு தினங்களாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள உள்ளாட்சி நிதி தணிக்கை உதவி இயக்குநர் அலுவலகத்தில் வருடாந்திர வரவு செலவுகளை ஆய்வு செய்து வருகிறது. இந்த தணிக்கை குழுவில் ஈடுபட்டுள்ள அலுவலர்களுக்கு ஊராட்சி ஒன்றியம் மற்றும் கிராம ஊராட்சிகளில் பணியாற்றி வரும் கிராம ஊராட்சி செயலாளர்கள் லஞ்சம் கொடுப்பதாக திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறைக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

திடீர் ஆய்வு: இந்த புகாரை தொடர்ந்து திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை துணை கண்காணிப்பாளர் நாகராஜன் தலைமையில் 20 பேர் கொண்ட குழு அதிரடியாக இன்று 27.05.24 மாலை தணிக்கை குழு அலுவலகத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது அலுவலகத்தில் பணியாற்றி வரும் அலுவலர்கள் மற்றும் ஊழியர்களிடம் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர். மேலும் அவர்களிடம் இருந்த பணத்தை பறிமுதல் செய்து அதற்கான விவரங்களை சேகரித்து வருகின்றனர்.

பணம் சிக்கியது: இதில் சில அலுவலர்களிடம் கணக்கில் வராத பணம் கூடுதலாக இருந்தது இதனைத் தொடர்ந்து அவர்களை தனியாக விசாரித்து வருகின்றனர். சுமார் இரண்டு லட்சத்திற்கு மேல் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டுள்ளது இது குறித்து அதிகாரி அலுவலர் மற்றும் ஊழியர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் சோதனை அரசு ஊழியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு முன்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கனிமவளத்துறை அலுவலகத்தில் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.













Click it and Unblock the Notifications