ஆசை ஆசையாக கட்டிய வீடு.. கணவனை தள்ளிவிட்டு காப்பாற்றி உயிரை விட்ட மனைவி.. என்ன நடந்தது?
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே, ஆசை ஆசையாக கட்டிக்கொண்டிருந்த வீட்டில் கணவர் மீது மின்சாரம் பாய்ந்த நிலையில், அவரை தள்ளிவிட்டு காப்பாற்றிவிட்டு, மனைவி உயிரை விட்டுள்ளார். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே குளத்துப்பட்டியை சேர்ந்த 37 வயதாகும் பாண்டி கார் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி 30வயதாகும் உதயசூரியா நிலக்கோட்டையில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இந்த தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் இருக்கிறார்கள்.

நிலக்கோட்டை அருகே உள்ள மீனாட்சிபுரத்தில் டிரைவர் பாண்டி புதிதாக வீடு ஒன்றை கட்டி வருகிறார். அண்மையில் தான் அந்த வீட்டிற்கு மேல்தளம் (கான்கிரீட் ) போட்டார்கள். மாடிக்கான வேலை நடப்பதால் வெளிச்சத்துக்காக, வீட்டுக்குள் தற்காலிகமாக மின்விளக்கு ஒன்றை அவர் எரிய விட்டிருக்கிறார்.
இந்நிலையில் சனிக்கிழமை இரவு நேரத்தில் கணவன்-மனைவி 2 பேரும் புதிய வீட்டுக்கு சென்றுள்ளார்கள். அங்கு தாங்கள் ஆசையோடு கட்டி வரும் வீட்டிற்கு தண்ணீரை குழாய் மூலம் பீய்ச்சி அடித்தனர். அப்போது விளக்குக்கு பயன்படுத்திய வயரில் இருந்து மின்கசிவு ஏற்பட்டிருந்தது.
அதன் மீது தண்ணீர் பட்டவுடன், எதிர்பாராதவிதமாக பாண்டி மீது மின்சாரம் பாய்ந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பாண்டி கூச்சலிட்டார். இதையடுத்து கொஞ்சம் கூட யோசிக்காத உதயசூரியா தனது கணவரை காப்பாற்றுவதற்காக அவரை அங்கிருந்து தள்ளி விட்டார். இதனால் உதயசூரியா மீது மின்சாரம் பாய்ந்தது. இதனையடுத்து அவர்கள் 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.

அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர், ஏற்கனவே உதயசூரியா இறந்து விட்டதாக தெரிவித்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் பாண்டிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் குரு வெங்கட்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். கணவரை காப்பாற்ற முயன்றபோது மின்சாரம் பாய்ந்து மனைவி பலியான சம்பவம், திண்டுக்கல் நிலக்கோட்டை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications