லேப்டாப் -டிக்சனரி -கால்குலேட்டர்! பரிசுமழையில் நந்தினி! திமுக மாவட்டச் செயலாளர் நேரில் வாழ்த்து!
திண்டுக்கல்: பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவி நந்தினிக்கு திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் லேப்டாப், டிக்சனரி, கால்குலேட்டர் என பரிசுப்பொருட்களை நேரில் வழங்கி வாழ்த்து தெரிவித்துள்ளார் ஐ.பி.செந்தில்குமார் எம்.எல்.ஏ.
பள்ளிக்கல்வித்துறையால் பன்னிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த திங்கள்கிழமை அன்று வெளியிடப்பட்டது. இத்தேர்வில் மாநிலம் முழுவதும் 94.03 சதவிகிதம் மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதில் மாணவிகள் 96.38 சதவிகிதமும், மாணவர்கள் 91.45 சதவிகிதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்நிலையில் திண்டுக்கல், அண்ணாமலையார் மில்ஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு பயின்ற வணிகவியல் மாணவி நந்தினி, அனைத்து பாடங்களிலும் முழு மதிப்பெண்னான 600-க்கு 600 மதிப்பெண் பெற்று மாநில அளவில் முதல் இடம் பெற்று வரலாற்று சாதனை படைத்தார்.
இதையடுத்து அவருக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் இன்னும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், ரிசல்ட் வந்த அன்றே நந்தினியை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசி வாழ்த்து தெரிவித்தார்.
அடுத்த ஒரு நாளில் சென்னைக்கு சென்று முதலமைச்சர் ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து நந்தினி வாழ்த்து பெற்றார். அப்போது அவருக்கு சாக்லேட் கூடையை பரிசளித்து என்ன உதவி தேவைப்பட்டாலும் கேட்கலாம் என முதல்வர் நம்பிக்கை அளித்தார்.
இதேபோல் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையும் தொலைபேசி மூலம் நந்தினியை தொடர்பு கொண்டு வாழ்த்துக்கூறினார். கவிஞர் வைரமுத்து திண்டுக்கல்லில் உள்ள மாணவி நந்தினி வீட்டிற்கே சென்று தங்கப்பேனாவை பரிசளித்து பாராட்டினார்.
அந்த வரிசையில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் மாணவி நந்தினியை அவரது இல்லம் தேடிச் சென்று சந்தித்து வாழ்த்து கூறியதோடு லேப்டாப் ஒன்றையும் பரிசளித்தார்.
அதேபோல் கல்லூரி பட்டப்படிப்புக்கு தேவையான டிக்சனரி, கால்குலேட்டர் உள்ளிட்ட பயனுள்ள பொருட்களும் வழங்கப்பட்டன.












Click it and Unblock the Notifications