கள்ளகாதலனுடன் போதையில் ஜாலி ரெய்டு! நடுவழியில் பெண்ணுக்கு வந்த ஆசை! 6 வயது சிறுமிக்கு படுகாயம்
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே குடிபோதையில் கள்ளக்காதலனின் பைக்கை பெண் ஒருவர் இயக்கி 6 வயது சிறுமி மீது மோதியதால் அச்சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே கருங்கல்பட்டியைச் சேர்ந்த செந்தில்முருகன்- ஐஸ்வர்யா தம்பதியின் மகள் தரனேஸ்வரி (6). இவர் உசிலம்பட்டி அரசு பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படிக்கிறார்.
இவர் நேற்று மாலை பள்ளியிலிருந்து அரசு பேருந்தில் தனது ஊருக்கு வந்தார். கருங்கல்பட்டி பேருந்து நிறுத்தத்தில் இறங்கி வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

பெண்
அப்போது பெண் ஒருவர் ஓட்டி வந்த பைக் சிறுமி தரனேஸ்வரி மீது பயங்கரமாக மோதியது. இதில் தரனேஸ்வரி பலத்த காயமடைந்தார். வலியால் அலறி துடித்த சிறுமியை அவரது உறவினர்கள் மீட்டு வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர்.

முகத்தில் 16 தையல்
அங்கு தரனேஸ்வரிக்கு முகத்தில் 16 தையல் போட்டு முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தகவல் அறிந்த கூம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அதில் பைக்கை ஓட்டி வந்த பெண் வெல்லம்பட்டியை சேர்ந்த ரேவதி என்பது தெரியவந்தது.

கள்ளக்காதலன்
அவருடன் பைக்கில் வந்தது அவரது கள்ளக்காதலன் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த லிங்கசாமி என்பதும் தெரிய வந்தது. இருவரும் மதுபோதையில் இருந்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து போலீசார் இருவரையும் அழைத்து விசாரணை செய்தனர்.

போதை தெளியாத ஜோடி
அப்போதும் இருவருக்கும் போதை தெளியாமல் இருந்தனர். மேலும் விசாரணையில் லிங்குசாமி கூறுகையில் நானும் ரேவதியும் தனிமையான இடத்திற்கு சென்றோம். அங்கு மது அருந்தினோம். பிறகு இருவரும் உல்லாசமாக இருந்தோம். இதையடுத்து வீட்டுக்கு செல்ல அவரை என் வாகனத்தில் உட்கார வைத்தேன்.

நீண்ட நாள் ஆசை
அப்போது ரேவதி "எனக்கு பைக் ஓட்ட நீண்ட நாள் ஆசை, உன் பைக்கை தாயேன் ஓட்டி பழகுறேனு" லிங்குசாமியிடம் கேட்டார். அப்போது நானும் என் காதலியின் ஆசையை நிறைவேற்ற இந்த ஓட்டு என்றேன் என லிங்குசாமி போலீஸில் வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அதிர்ச்சி
மேலும் அந்த குழந்தைக்கு முகத்தில் 16 தையல்கள் போடும் அளவிற்கு ரேவதி வாகனத்தை தாறுமாறாக ஓட்டியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடிபோதையில் வாகனமே இயக்கக் கூடாது, இதில் வாகனமே இயக்கத் தெரியாத ஒருவரிடம் பைக்கை கொடுக்கலாமா என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications