வீட்டில் ED ரெய்டு.. திடீரென குவிந்த தொண்டர்கள்.. பந்தல் போட்டு சைவ விருந்து கொடுக்கும் ஐ.பெரியசாமி!
திண்டுக்கல்: அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் அவரது மகன், மகள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடந்து வரும் நிலையில், வீட்டின் முன் கூடிய திமுகவினருக்கு பந்தல் அமைக்கப்பட்டு டீ, காபி, உணவு, தண்ணீர் ஆகியவை அளிக்கப்பட்டு வருகிறது. அமலாக்கத்துறைக்கு எதிராகவோ, மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பாமல் அமைதி காக்குமாறு அமைச்சர் தரப்பில் தொண்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சரும் திமுக துணை பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி வீட்டில் காலை 6 மணி முதல் அமலாக்கத்துறையின் சோதனை நடைபெற்று வருகிறது. இதேபோல அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகனும், பழனி சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான ஐபி செந்தில்குமார், மகள் இந்திராணி ஆகியோரின் வீடுகளிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

அமலாக்கத்துறையினர் இந்த ரெய்டு சுமார் கிட்டத்தட்ட 10 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது. அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு நடக்கும் தகவல் அறிந்து, திண்டுக்கல் மாவட்ட திமுகவினர் நேரடியாக அவரின் வீட்டின் முன்பாக குவியத் தொடங்கினர். அமலாக்கத்துறைக்கு எதிராக கோஷங்களும் எழுப்பப்பட்டன.
இதற்கு முன்பாக அமைச்சர்களின் வீடுகளில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்திய போதும், இப்படியான சம்பவங்கள் அரங்கேறின. ஆனால் ஒரு கட்டத்தில் அமலாக்கத்துறை ரெய்டை அறிந்து வீட்டின் முன் குவிந்த தொண்டர்கள் அமைதியாகினர். அமைச்சர் ஐ பெரியசாமி மற்றும் ஐபி செந்தில்குமாரின் வீடுகளில் சாமியான பந்தல் அமைக்கப்பட்டு வரும் தொண்டர்களுக்கு இருக்கை அளிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் காலையிலிருந்து வீடு தேடிவரும் தொண்டர்களுக்கு டீ, காபி, தண்ணீர், உணவு ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது எந்த சூழ்நிலையிலும் யாரும் அமலாக்கத்துறைக்கு எதிராகவும் மத்திய அரசுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பக் கூடாது என அமைச்சர் தரப்பிலும் எம்எல்ஏ தரப்பிலும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுவரை தமிழ்நாட்டில் நடந்த அமலாக்கத்துறை சோதனைகளிலேயே அமைதியான முறையில் திண்டுக்கல்லில் தான் சோதனை நடக்கிறது என்று திமுகவினர் கூறி வருகின்றனர். திண்டுக்கல் சீலப்பாடியில் அமைந்துள்ள பழனி சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும் அமைச்சர் ஐ.பி.பெரியசாமியின் மகனுமான ஐ.பி.செந்தில்குமார் வீட்டில் 6 மணி நேரத்திற்கும் மேலாகத் தொடரும் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
5 பேர் கொண்ட அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் 300க்கும் மேற்பட்ட கட்சியினர் அவரது வீட்டின் முன்பு குவிந்த நிலையில், தற்போது பந்தல் போட்டு அமர்ந்துள்ளனர். தொடர்ந்து திமுக கட்சியினருக்கு உணவு ஏற்பாடு செய்யப்பட்டு அட்டைப்பெட்டியில் கொண்டுவரப்பட்டு வழங்கப்பட்டது. அதேபோல் சோதனையில் ஈடுபட்டு வரும் அதிகாரிகளுக்கும் உணவு பார்சல்கள் வீட்டிற்குள் அனுப்பப்பட்டன.












Click it and Unblock the Notifications