“நீதிபதி நாக்கை அறுப்பேன்”.. காங்கிரஸ் ஆர்ப்பாட்டத்தில் வாயை விட்ட நிர்வாகி.. பாய்ந்தது வழக்கு!
திண்டுக்கல் : ராகுல் காந்தி மீதான நடவடிக்கையைக் கண்டித்து திண்டுக்கல்லில் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ராகுல் காந்திக்கு தண்டனை விதித்த நீதிபதி நாக்கை அறுப்பேன் என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசிய காங்கிரஸ் மாநகர மாவட்ட தலைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக கர்நாடக மாநிலம் கோலாரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் முன்னணி தலைவர் ராகுல் காந்தி, மோடி பற்றி பேசியதற்கு எதிராக குஜராத் மாநிலம் சூரத் பாஜக எம்எல்ஏ புர்னேஷ் மோடி, நீதிமன்றத்தில் குற்றவியல் அவதூறு வழக்கு தொடர்ந்தார். ஒட்டுமொத்த மோடி சமூகத்தையும் ராகுல் காந்தி இழிவுபடுத்தி விட்டதாக அவர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு சூரத் நீதிமன்றத்தில் நடந்த நிலையில் சூரத் நீதிமன்ற நீதிபதி வர்மா, ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார். மேலும், அவருக்கு இந்த வழக்கில் மேல் முறையீடு செய்ய ஏதுவாக ஜாமீனும் அளிக்கப்பட்டது. சூரத் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் ராகுல் காந்தி எம்.பி பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில், ராகுல் காந்தி மீதான தகுதி நீக்க நடவடிக்கையைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி/ எஸ்.டி பிரிவு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் திண்டுக்கல் மாநகர மாவட்ட தலைவர் துரை மணிகண்டன் பேசும்போது, "ராகுல் காந்தியை சிறைக்கு அனுப்ப வேண்டும் என நினைக்கும் பாஜக அரசை நாட்டை விட்டு வெளியேற்றுவோம். காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் ராகுல் காந்திக்கு தீர்ப்பு வழங்கிய சூரத் நீதிமன்ற நீதிபதி எச்.வர்மாவின் நாக்கை அறுப்போம்" என்று பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் உலகநாதன், சார்பு ஆய்வாளர் மனோகரன் மற்றும் காவலர்கள், நீதிபதிக்கு பகிரங்க மிரட்டல் விடுத்த திண்டுக்கல் மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் துரை மணிகண்டன் மீது 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications