கொடைக்கானலில் பாலியல் வழக்கில் 9 நாளில் தீர்ப்பு.. வரலாற்று சிறப்பு.. என்ன தீர்ப்பு தெரியுமா?
நீதித்துறை வரலாற்றில் அரிதான நிகழ்வாக பாலியல் வழக்கில் 9 நாட்களில் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. கொடைக்கானல் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கி உள்ளது.
கொடைக்கானல்: நீதித்துறை வரலாற்றில் அரிதான நிகழ்வாக பாலியல் வழக்கில் 9 நாட்களில் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இந்த சம்பவம் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நடந்துள்ளது. குற்றவாளிகள் இரண்டு பேருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பாலியல் வழக்கு ஒன்றில் கொடைக்கானலில் சம்பவம் நடந்த 9 நாளில் குற்றவாளிகளுக்கு தண்டனை அறிவித்து தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. கொடைக்கானல் 2-வது நீதித்துறை நடுவர் மன்றம் பாலியல் குற்றவாளிகளுக்கு தண்டனை அறிவித்து இந்த தீர்ப்பினை அளித்துள்ளது. என்ன நடந்தது என்பதை இப்போது பார்ப்போம்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலை கிராமத்தில் வசிக்கும் பெண் ஒருவர் விடுதி ஒன்றை அப்பகுதியில் நடத்தி வருகிறார். இவர், கடந்த பிப்ரவரி 4ம் தேதி கொடைக்கானல் சென்று இருக்கிறார். பின்னர் காரில் தனது விடுதிக்கு திரும்பி வந்து கொண்டிருந்திருக்கிறார். அப்போது மன்னவனூரை சேர்ந்த ஜீவா (22), பூண்டியைச் சேர்ந்த பாலமுருகன் (26) ஆகியோர் காரை நிறுத்தி லிப்ட் கேட்டிருக்கிறார்களாம். பின்னர் அந்தப் பெண்ணுக்கு இருவரும் பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக புகார் எழுந்துள்ளது.
இது தொடர்பாக கொடைக்கானல் போலீசில் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்து உடனே விசாரித்த போலீசார், ஜீவா, பாலமுருகனை கைது செய்தனர். இந்த வழக்கு கொடைக்கானல் 2-வது நீதித்துறை நடுவர் மன்றத்தில் உடனடியாக விசாரணைக்கு எடுக்கப்பட்டது, போலீஸாரும் உடனடியாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார்கள். அனைத்து தரப்பு விசாரணை முடிந்ததையடுத்து நீதித்துறை நடுவர் கே.கார்த்திக் செவ்வாய்கிழமை தீர்ப்பளித்தார். குற்றவாளிகள் இருவருக்கும் தலா 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் தலா ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுவதாக கூறினார். சம்பவம் நடந்த 9 நாளில் தீர்ப்பளித்துளளார்.

அந்த தீர்ப்பில் நீதித்துறை நடுவர் கே.கார்த்திக் கூறியிருந்தாவது: தனக்காக பெண் ஒருவர் நிற்கும்போது, எல்லா பெண்களுக்காகவும் நிற்பதாகவே அர்த்தம். சமுதாயத்தில் மாற்றத்தை கொண்டு வரவும், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் இருந்து சமூகத்தை பாதுகாப்பதற்கும், நாமே பொறுப்பேற்க வேண்டும். பெண்களுக்கு எதிரான கொடுமைகள் ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாதவை. பாலியல் துன்புறுத்தல் குறித்து தீர்வு காணும் போது எதிரிகள் பற்றி நாம் கவனத்தில் கொள்ளக்கூடாது. நாம் தேர்ந்தெடுக்கும் நடவடிக்கை குற்றம் செய்யும் நபர்களுக்கு ஒரு பாடம் கற்பிக்கும் நிகழ்வாக அமைய வேண்டும். பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை தடுக்க தண்டனைகளை கடுமையாக்க வேண்டும், அனைத்து ஆண்களும் பெண்களை நன்றாக நடத்துகிறார்களா? என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்
இந்த வழக்கில் எதிரிகள் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமில்லாமல் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனால் இருவருக்கும் தலா 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் தலா ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுவதாக தீர்ப்பில் நீதித்துறை நடுவர் கே.கார்த்திக் குறிப்பிட்டார். குற்றவாளிக்கு சம்பவம் நடந்த ஒன்பது நாளில் தண்டனை அறிவிக்கப்பட்டிருப்பது நீதித்துறை வரலாற்றில் சிறப்பான ஒன்றாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications