பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை அமைச்சரவையில் இருந்து தூக்கக்கூடாது.. உண்மையாகிடும்.. சொல்வது எச்.ராஜா!
திண்டுக்கல் : "பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கினாலோ அல்லது துறையை மாற்றினாலோ, திமுகவினர் சம்பாதித்தது பற்றி உண்மையை சொன்னதற்காகவே பதவியில் இருந்து எடுத்ததாக கருதப்படும். எனவே, அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கக்கூடாது." என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கூறியுள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது முன்னோர்கள் தங்கள் வாழ்நாளில் சம்பாதித்ததை விட இந்த ஒரு வருடத்தில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சபரீசன் அதிக பணம் சம்பாதித்ததாக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக ஒரு ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த ஆடியோவை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சமூக வலைதளத்தில் வெளியிட்டார். இதைத்தொடர்ந்து இரண்டாவது ஆடியோவும் வெளியானது.

சர்ச்சை ஆடியோ : இந்த ஆடியோக்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. ஆடியோ பற்றி விளக்கம் அளித்த நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், "சமூக வலைதளங்களில் நான் பேசியதாக பரவும் ஆடியோ போலியாக ஜோடிக்கப்பட்டது. எந்த ஒரு தனி நபரிடமோ, தொலைபேசி உரையாடலிலோ அல்லது தனிப்பட்ட உரையாடலிலோ நான் இவ்வாறு கூறவில்லை. இந்த உரையாடல் தங்களுடன் நடந்தது என்று சொல்ல இதுவரை யாரும் முன்வரவில்லை என்பதில் இருந்தே இந்த ஆடியோ போலியானது என அறிந்துகொள்ளலாம்" என்றார்.
அதேசமயம், தமிழ்நாடு பாஜக, இந்த விவகாரம் குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரிடம் புகார் தெரிவித்துள்ளது. பிடிஆர் பேசியதாக வெளியான ஆடியோ திமுகவினர் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் திமுக தலைமை இதுவரை வெளிப்படையாக எந்தக் கருத்தும் தெரிவிக்காத நிலையில், அரசியல் அரங்கில் விவாதங்கள் நிகழ்ந்து வருகின்றன.
அமைச்சர் பதவியில் இருந்து நீக்கக்கூடாது : இதற்கிடையே விரைவில் அமைச்சரவை மாற்றம் நிகழ இருப்பதாகவும் ஒரு தகவல் பரவி வருகிறது. இந்நிலையில், பழநியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, "நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆடியோவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மகன், மருமகன் ஒரு ஆண்டில் ரூ.30 ஆயிரம் கோடி சம்பாதித்தது குறித்து கூறியுள்ளார். என்ன காரணத்துகாக ஆடியோ வெளியிட்டாரோ, அவருக்கு நன்றி சொல்லியே ஆக வேண்டும்.

இதற்காக பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கினாலோ அல்லது துறையை மாற்றினாலோ அவர் திமுகவினர் சம்பாதித்தது பற்றி உண்மையை சொன்னதற்காகவே பதவியில் இருந்து அவர் எடுக்கப்பட்டதாக கருதப்படும். எனவே, அவரை அமைச்சர் பதவியில் இருந்து எடுக்கக்கூடாது" எனத் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், "பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, திமுகவைச் சேர்ந்த 16 பேரின் சொத்து பட்டியலை வெளியிட்டார். இந்த சொத்து எங்கிருந்து வந்தது என்பதில் தான் ஊழல் இருக்கிறது. ஜி ஸ்கொயர் நிறுவனத்துக்கும் திமுகவுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என கூறுகின்றனர். ஆனால் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வருமான வரித்துறை சோதனை நடத்தி எங்களை மிரட்ட முடியாது என்கிறார். இதனால், திமுகவுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது." எனக் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications