ஒழுங்கா உன் பேரை சொல்லு..பேய் பிடித்ததாக இளம்பெண்ணுக்கு அடி! பூசாரிக்கு பொளேர் விட்ட ’ஐயப்ப’ சாமி!
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே கோவில் பூசாரி ஒருவர் பேய் பிடித்து உள்ளது என்று கூறி பெண்ணை கொடூரமாகத் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இந்நிலையில் பெண்ணை வேண்டுமென்றே பூசாரி தாக்குவது போல் இருந்ததால் பூசாரியை ஐயப்ப பக்தர்கள் கன்னத்தில் ஓங்கி அடித்த காட்சிகளும் வெளியாகியுள்ளது.
தொழில்நுட்பம், மருத்துவ வசதிகள் எவ்வளவோ பெருகிவிட்ட போதிலும் கிராமங்களில் இன்னும் பல நோய்களுக்கு பாரம்பரிய முறைப்படி வைத்தியம் பார்க்கிறேன் என்ற பெயரில் தொக்கம் எடுப்பது, பேய் ஓட்டுவது உள்ளிட்ட விபரீத செயல்களை ஈடுபடுவது தொடர் கதையாகி வருகிறது.

இதை மையப்படுத்தி வந்த கொட்டுக்காளி திரைப்படம் சமூகத்தில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஆனாலும் இன்னும் பேய் ஓட்டுகிறேன் என்ற பெயரில் பெண்களை அடிப்பது, கண்களில் விபூதி தூவுவது என கொடூர செயல்கள் நடைபெற்று வருகிறது.
அப்படித் தான், திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே கோவில் பூசாரி ஒருவர் பேய் பிடித்து உள்ளது என்று கூறி பெண்ணை கொடூரமாகத் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
வேடசந்தூர் அருகே காக்காதோப்பு பிரிவில் முனியப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பூசாரியாக இருப்பவர் அரியபித்தம்பட்டியை சேர்ந்த ஆனந்த் (வயது 45). இவர் கோவிலுக்கு சாமி கும்பிட வரும் பெண்களை உனக்கு பேய் பிடித்து உள்ளது, பேயை விரட்ட வேண்டும் என்று கூறி கருங்காலி குச்சியால் தாக்கி கொடுமைப்படுத்துவதை வழக்கமாக வைத்துள்ளார்.

ஆனால், அடி வாங்கிய பெண்கள் ஏராளமானோர் வெளியில் சொல்லாமல் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த வாரம் இதே கோவிலுக்கு வந்த வேடசந்தூரை சேர்ந்த ஒரு பெண்ணை கடுமையாக தாக்கியதில் அவர் படுகாயம் அடைந்து வெளியில் சொல்லாமல் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் ஆண்களுடன் வராமல் பெண்களாக வருபவர்களை தேர்ந்தெடுத்து அராஜகம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார் எனவும் குற்றம் சாட்டப்படுகிறது.
இந்நிலையில் அமாவாசையன்று தனது தாய் மற்றும் உறவினர்களுடன் வந்த பெண்ணை உனக்கு பேய் பிடித்து உள்ளது, பேயை விரட்ட வேண்டும் என்றும் கருங்காலி குச்சியால் கடுமையாக தாக்கி, யார் நீ உன்னுடைய பெயரைச்சொல் என்று கொடூரமாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றது.

பூசாரி செய்வது தவறு என்பதை அந்த கோவிலுக்கு சென்ற வேடசந்தூர் ஐயப்பன் கோவில் குருசாமி தட்டி கேட்டு அவரை கன்னத்தில் அறைந்து அமைதியாக இரு என்று கூறிய பொழுது வேண்டுமென்றே சாமி வந்தது போல் நாடகமாடி அவரையும் அடிக்க மிரட்டி உள்ளார். மேலும் அடி வாங்கிய பெண்ணின் தாயார் தடுக்க முயற்சித்த பொழுது அவரையும் பூசாரி தாக்க முற்பட்டார்.
தற்போது இந்த வீடியோ வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது போன்ற போலி பூசாரிகள் மீது வேடசந்தூர் போலீசாரும் தமிழக அரசும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே வேடசந்தூர் பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. கருங்காலி குச்சியால் பூசாரி தாக்கியதில் காயம் அடைந்த பெண் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.













Click it and Unblock the Notifications