ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. அண்ணாமலை போட்டியிட்டாலும் முடியாது.. முத்தரசன் பேட்டி!
ஈரோடு: திமுக கூட்டணியை எதிர்த்து அண்ணாமலை உட்பட யார் போட்டியிட்டாலும் வெற்றி பெற முடியாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். அதேபோல் காங்கிரஸ் கட்சி அறிவிக்கும் வேட்பாளர் வெற்றியை உறுதி செய்ய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அனைத்தும் செய்யும் என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவெரா மாரடைப்பால் மரணமடைந்தார். இதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக தற்போது இடைத்தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. ஜனவரி 31ம் தேதி வேட்புமனுத் தாக்கல் தொடங்கி, பிப்ரவரி 7ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதற்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 27ம் தேதி நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை மார்ச் 2ம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் போட்டி
இதனைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலிலும் திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் கட்சிக்கே வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன்பின்னர் அடுத்தக்கட்ட பணிகளில் காங்கிரஸ் கட்சி தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. ஈரோடு தொகுதியில் மீண்டும் வெற்றிபெற காங்கிரஸ் கட்சி பணியாற்றி வருகிறது.

முத்தரசன் பேட்டி
இந்த நிலையில் ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பேசுகையில், ஒரே நாடு, ஒரே கட்சி என்பதை பாஜக கொண்டு வர நினைக்கின்றனர். நாட்டு மக்களால் நிராகரிக்கப்படுகிற ஆட்சியாக மத்திய அரசு உள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. மகளிர் ஆணைய தலைவரே மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவித்தார்.

கூட்டணி தர்மம்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கே இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. கூட்டணி தர்மம் என்பது மிக முக்கியம். கூட்டணி தர்மத்தின் படி, காங்கிரஸ் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி அறிவிக்கும் வேட்பாளர் வெற்றியை உறுதி செய்ய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அனைத்தும் செய்யும். திமுக கூட்டணியை எதிர்த்து அண்ணாமலை உள்பட யார் போட்டியிட்டாலும் வெற்றி பெற முடியாது என்று தெரிவித்தார்.

4 பிரிவாக அதிமுக
அதிமுக கூட்டணி குறித்து கருத்து தெரிவித்த முத்தரசன், அதிமுக கூட்டணி தற்போது முழுமையாக இருக்கிறதா என்பது தெரியவில்லை. அதிமுக தற்போது 4 பிரிவாக உள்ளது. மேலும், தமிழ்நாட்டின் பல்வேறு துறைகளில் வேலை செய்யும் ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வலியுறுத்தி ஜன 24ம் தேதி நடைபெறும் போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவளிக்கிறது என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications