கள்ளக்குறிச்சி கலவரம்! மாடுகளின் பால் சுறக்கும் காம்புகளை அறுத்தது வேதனையளிக்கிறது -கொங்கு ஈஸ்வரன்
ஈரோடு: கள்ளக்குறிச்சி கலவரத்தின் போது மாடுகளின் பால் சுறக்கும் காம்புகளை அறுத்தது வேதனையிலும் வேதனை தருவதாக, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர் செய்தியாளர்களிடம் இதனைக் கூறினார்.
கள்ளக்குறிச்சியில் நிகழ்ந்த மாணவியின் மரணம் பெற்றோருக்கு மட்டுமல்லாமல் சமுதாயத்துக்கே பேரிழப்பாக அமைந்திருப்பதாக அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

கொங்கு ஈஸ்வரன்
கள்ளக்குறிச்சியில் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவி மரணம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு, அதற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். வன்முறையை பொறுத்தவரை அது எதற்குமே தீர்வாகாது என்றும் பள்ளி வளாகத்தில் நிகழ்ந்ததை பார்க்கும் போது திட்டமிட்டு நடத்தப்பட்ட வன்முறையை போல் தோன்றுவதாக கூறியிருக்கிறார்.

போராட்டக்காரர்கள்
போராட்டக்காரர்கள் சம்மட்டி உள்ளிட்ட ஆயுதங்களை கையோடு எடுத்து வந்திருந்ததை காண முடிவதாகவும் அதேபோல் நெருப்பு வைப்பதற்கு தேவையான பொருட்களுடன் நுழைந்திருப்பதாகவும் கூறினார். இது போன்ற ஒரு கலவரம் இனி தமிழகத்தில் நடக்கக்கூடாது எனக் கேட்டுக்கொண்ட கொங்கு ஈஸ்வரன், மாடுகளின் பால் சுறக்கும் காம்புகளை அறுத்தது வேதனையிலும் வேதனை தருவதாக தெரிவித்தார்.

வேதனை தருகிறது
மாடுகளின் பால் சுறக்கும் காம்புகளை அறுத்திருப்பது தனக்கு சொல்ல முடியாத வேதனையை தருவதாக கூறினார். போராட்டக்காரர்கள் செய்த கலவரத்தால் 4,000க்கும் மேற்பட்ட மாணவர்களின் சான்றிதழ்களும், 350-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் பள்ளி ஊழியர்களின் சான்றிதழ்களும் எரிந்திருப்பதாக கூறிய ஈஸ்வரன், அரசின் நடவடிக்கை பெற்றோருக்கும், பொதுமக்களுக்கும் நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
Recommended Video

மர்ம முடிச்சுகள்
கள்ளக்குறிச்சி பள்ளிக் கலவரம் தொடர்பாக அரசு தரப்பில் தீவிரமாக விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. விரைவில் மாணவி மரண வழக்கில் மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications