அரசியலே ஆடியது.. ஜி.கே.வாசனின் தமாகாவில் தமிழருவி மணியன்! காமராஜர் மக்கள் கட்சியையும் இணைத்தார்!
ஈரோடு: ஈரோட்டில் நடந்த விழாவில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இணைந்தது தமிழருவி மணியனின் காமராஜர் மக்கள் கட்சி. ஜி.கே.வாசன் முன்னிலையில் இந்த நிகழ்வு நடந்தது. மூப்பனார் இருந்த போது தமாகாவில் தன்னை இணைத்துக் கொண்ட தமிழருவி மணியன், தற்போது அவருடைய மகன் தலைமையிலான தமாகாவில் மீண்டும் இணைந்துள்ளார்.

இந்த நிகழ்வில் ஜி.கே.வாசன் பேசுகையில், தமாகாவுடன் காமராஜர் மக்கள் கட்சியும் ஒன்றாக இணைந்தது வருங்காலங்களில் அரசியல் களத்திற்கு வசந்த காலமாக இருக்கும். இரு பெயர்களாக இருந்தாலும் இரண்டும் இரு கண்கள். இது கூட்டுக் குடும்பங்கள் இணையும் விழா என பேசினார்.
கடந்த நவம்பர் மாதம் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் 12ஆம் ஆண்டு தொடக்க விழா சென்னையில் நடந்தது. அப்போது அந்த விழாவில் அக்கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் கூறியதாவது: காமராஜர், மூப்பனார் ஆசியோடு தமிழ் மாநில காங்கிரஸ் 11 ஆண்டுகள் இயக்கப் பணி, மக்கள் பணி ஆற்றி 12 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
காந்திய வழியில் கட்சியை நடத்தும் காமராஜர் மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் தனது இயக்கத்தை தமிழ் மாநில காங்கிரஸில் டிசம்பர் 20ஆம் தேதி இணைக்கவுள்ளார். அவருக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்திருந்தார்.
அந்த வகையில் ஈரோட்டில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தனது காமராஜர் மக்கள் கட்சி நிர்வாகிகளுடன் சென்ற தமிழருவி மணியன், ஜி.கே.வாசன் முன்பு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அவருக்கு ஜி.கே.வாசன் பொன்னாடை அணிவித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார்.
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்த போது 2020 ஆம் ஆண்டு அக்கட்சியின் மேற்பார்வையாளராக தமிழருவி மணியன் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் தனது உடல்நிலை பாதிக்கப்பட்டதால் தாம் அரசியலுக்கு வரவில்லை என ரஜினி அறிவித்த நிலையில் தமிழருவி மணியன், அண்ணாமலைக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார். பின்னர்
இந்த நிலையில் அவர் திடீரென தனது கட்சியை தமாகாவில் இணைந்திருப்பது தமிழக அரசியலின் மிகப்பெரிய நிகழ்வாக மாறி இருக்கிறது. இதனால் தமிழருவி மணியனின் அடுத்தக்கட்ட திட்டம் என்னவாக இருக்கும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
யார் இந்த தமிழருவி மணியன்
சிறந்த பேச்சாளர், எழுத்தாளர். இவரது இயற்பெயர் தெய்வசிகாமணி. இவரது இலக்கிய திறனை பாராட்டி, தமிழக முதல்வர் காமராஜர், தமிழருவி எனும் பெயரால் பாராட்டினார். அன்று முதல் தமிழருவி மணியன் என அழைக்கப்பட்டு வருகிறார். இவர் பல அரசியல் கட்சிகளில் களம் கண்டவர். ஆரம்பத்தில் காந்தி மக்கள் இயக்கம் எனும் அமைப்பை தொடங்கினார்.
தமிழருவி மணியன்
தமிழருவி மணியன் சென்னை மாநிலக் கல்லூரியில் புவியியல் பயின்று பட்டம் பெற்றார். இவர் காமராஜரின் தலைமைத்துவத்தால் ஈர்க்கப்பட்டு, இந்திய தேசிய காங்கிரஸ், சிண்டிகேட் காங்கிரஸ் எனப்பட்ட நிறுவன காங்கிரஸ் ஆகியவற்றில் இணைந்திருந்தார்.
ஜனதா கட்சி
காமராஜரின் மறைவுக்கு பிறகு ஜனதா கட்சியில் இணைந்தார். அக்கட்சியின் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளராக இருந்தார். ராமகிருஷ்ண மகாபலேஷ்வர் ஹெக்டே ஜனதா தளத்தில் இணைந்து அதன் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளராக இருந்தார்.
ஜனதா கட்சி
ராமகிருஷ்ணன் ஹெக்டே ஜனதா தளத்தில் இருந்து பிரிந்து லோக்சக்தி எனும் கட்சியைத் தொடங்கிய போது அக்கட்சியின் தமிழ்நாட்டுத் தலைவராக பொறுப்பு வகித்தார். பின்னர் தமிழக லோக்சக்தி என்ற கட்சியைத் தொடங்கினார்.
மூப்பனாரின் தமிழ் மாநில காங்கிரஸ்
மூப்பனாரின் அழைப்பை ஏற்று தமிழக லோக்சக்தி கட்சியை கலைத்துவிட்டு தமாகாவில் இணைந்து அதன் பொதுச் செயலாளர் ஆனார். பின்னர் இந்திய தேசிய காங்கிரஸில் தமாகா இணைந்த போது இந்திய தேசிய காங்கிரஸின் தமிழகத்தின் பொதுச் செயலாளராக இருந்தார்.
மீண்டும் தமாகா
2008ஆம் ஆண்டில் ஈழ இனப்பிரச்சினையில் அக்கட்சியின் நிலைப்பாட்டில் கருத்து வேறு ஏற்பட்டு அதிலிருந்து விலகினார். 2009ஆம் ஆண்டில் காந்திய மக்கள் இயக்கம் என்பதை தொடங்கினார். பின்னர் அதை 2022 இல் காமராஜர் மக்கள் கட்சி என மாற்றினார். தற்போது இந்த காமராஜர் மக்கள் கட்சியை கலைத்துவிட்டு அதன் நிர்வாகிகளுடன் தமாகாவில் மீண்டும் இணைந்துவிட்டார்.












Click it and Unblock the Notifications