ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் ஜொலி ஜொலித்த வெள்ளிக் கட்டிகள்! ஈரோட்டில் சிதறிய வெள்ளி நகைகள்! யாரிந்த நபர்
ஈரோடு: தங்க ஆபரணங்கள் இறக்குமதி மற்றும் ஏற்றுமதியில், பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்து வருகிறது.. இதுபோன்ற சட்டவிரோத செயல்பாட்டால், அரசுக்கு வருவாய் இழப்பும் ஏற்பட்டுள்ளது. அதேபோல நாடு முழுவதும் பல்வேறு விமான நிலையங்களில் சமீப காலமாக தங்க கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், ஈரோட்டில் ரயில் பயணியிடம் வெள்ளி கட்டிகள் கண்டெடுக்கப்பட்டது மிகுந்த பரபரப்பை உண்டுபண்ணி வருகிறது.
வெளிநாடுகளிலிருந்து தங்கத்தை கடத்தும் சம்பவங்கள், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து நடந்தபடியே உள்ளது.. இதுபோன்ற கடத்தல்களை தடுக்க எத்தனையோ நடவடிக்கைகளை சுங்கத்துறை அதிகாரிகள் மேற்கொண்டபோதிலும், தினுசு தினுசான கடத்தல்கள் தொடர்ந்து நடைபெறுகிறது.

தங்க நகைகள் கடத்தல்
உள்நாட்டில் வரி விதிக்கப்பட்ட தங்கத்தின் விலை அதிகம் என்பதால், வெளிநாடுகளிலிருந்து இப்படி கடத்தி வந்து, கள்ளசந்தையில் விற்க நேரிடுவதாக காரணம் கூறப்படுகிறது.. கிலோ கணக்கிலான தங்கத்தை விமானங்கள், கப்பல்கள் மூலமாக கடத்துவதால், அரசுக்கும் வருவாய் இழப்பு ஏற்பட்டு விடுகிறது.
அதனால்தான், தங்கக் கடத்தலை ஒழிக்க மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் செயல்பட்டு வருகின்றன. இதன் கீழ், சுங்கத்துறை மற்றும் மத்திய வருவாய் புலானய்வு துறையும் துரிதமாக செயல்பட்டு, தங்க கடத்தலை ஒழிக்கும் முயற்சியில் இறங்கியிருக்கின்றன.
ஈரோடு ரயில்வே ஸ்டேஷன்
இந்நிலையில், ஈரோட்டில் ரயிலில் நடந்துள்ள கடத்தல் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.. இந்தூரிலிருந்து திருவனந்தபுரம் செல்லும் அகில்யா நகரி எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று அதிகாலை 3 மணிக்கு ஈரோடு ரெயில்வே ஸ்டேஷனுக்கு வந்துள்ளது.. இதனால் டியூட்டியில் இருந்த, போலீசார் ரெயில் பெட்டிகளில் வழக்கமான சோதனைகளில் ஈடுபட்டனர்.
அப்போது ஒரு பெட்டியில் இருந்து அவசர அவசரமாக ஒருவர் இறங்க முயன்றார். இதைப்பார்த்த பாதுகாப்பு படை போலீசார், அவரிடம் சென்று யார், என்னவென்று விசாரித்தனர்.. அதற்கு அந்த நபர், தான் சேலத்தில் இறங்க வேண்டியவர் என்றும், ஆனால் தூங்கிவிட்டதால், சேலம் ஸ்டேஷன் வந்தது தெரியாமல் போயிற்று என்றும், எனவே ஈரோட்டில் இறங்குவதாகவும் கூறினார்..
மினுமினுத்த வெள்ளி
எனினும் அந்த நபர் மீது போலீசாருக்கு சந்தேகம் தீராததால், அவர் வைத்திருந்த பைகளை சோதனை செய்தனர்.. அதில், வெள்ளிக்கட்டிகளும், வெள்ளி ஆபரணங்களும் ஜொலிஜொலிப்பதை கண்டு திகைத்தனர்.. இதுகுறித்து போலீசார் அந்நபரிடம் விசாரித்தனர்.. ஆனால், முன்னுக்கு பின் முரணாக அந்த நபர் பேசினார்..
அத்துடன், வெள்ளியை கொண்டு வந்ததற்கான ஆவணங்கள் உள்ளிட்ட எதுவுமே அவரிடம் இல்லை.. எதற்காக வெள்ளியை ரயிலில் கொண்டுவந்தார்? யாரிடம் கொண்டு செல்கிறார்? என்பது போன்ற விவரங்களும் தெரியாததால், ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் ஸ்டேஷனுக்கு அவரை போலீசார் அழைத்துச்சென்றனர்.
வெள்ளிக் கட்டிகள் - வெள்ளி நகைகள்
அப்போதுதான் விசாரணையில் அந்த நபரின் பெயர் தர்மலிங்கம் என்பது தெரியவந்தது.. 42 வயதாகிறதாம்.. சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள தங்கமாபுரிபட்டணத்தை சேர்ந்தவர்.. சேலத்திலுள்ள ஒரு நகைக்கடைக்கு வெள்ளிக்கட்டிகளை கொண்டு செல்வதாக போலீசாரிடம் சொன்னார்.. இதையடுத்து, ரெயில்வே பாதுகாப்பு படையினர் வெள்ளிக்கட்டிகளை பறிமுதல் செய்தனர்.
அதில் மொத்தம் 4 வெள்ளிக்கட்டிகள் இருந்துள்ளன.. அவைகளை எடை போட்டு பார்த்தபோது 18 கிலோ இருந்துள்ளது.. இதைத்தவிர வெள்ளி ஆபரணங்களும் பையில் இருந்தன.. அனைத்து வெள்ளியின் மதிப்பும் ரூ.27 லட்சம் என்கிறார்கள்..
'வெள்ளிக்கட்டிகளை உரிய ஆவணங்கள் எதுவுமில்லாமல், முறைகேடாக எடுத்து வந்ததால், தர்மலிங்கத்துக்கு ரூ.1,65,712 அபராதம் விதிக்கப்பட்டது. இதுதொடர்பாக தொடர்ந்து அவரிடம் விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது.. அத்துடன், இதில் வரி ஏய்ப்பு உள்ளிட்ட குற்றங்கள் உள்ளனவா? என்பது குறித்தும் விசாரணையை போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications