பயங்கர மோதல்.. தெலங்கானா-ஆந்திரா இடையே தண்ணீர் பிரச்சனை.. மத்திய அரசு வசம்போன நாகர்ஜூன சாகர் அணை
ஹைதராபாத்: ஆந்திரா, தெலங்கானா இடையே நள்ளிரவில் ஏற்பட்ட மோதல் காரணமாக நாகர்ஜூனா சாகர் அணையை மத்திய அரசு தனது கட்டுப்பாட்டில் எடுத்துள்ளது. அதோடு அணையில் மத்திய ரிசர்வ் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
2014ம் ஆண்டில் ஆந்திராவில் இருந்து தனிமாநிலமாக தெலங்கானா பிரிந்தது. இதையடுத்து இருமாநில எல்லையில் அமைந்துள்ள கிருஷ்ணா நதியின் குறுக்கே உள்ள நாகர்ஜூனா சாகர் அணை யாருக்கு சொந்தம் என்பதில் ஆந்திரா, தெலங்கானா இடையே மோதல் போக்கு உள்ளது.

இந்நிலையில் தான் கடந்த மாதம் 30ம் தேதி தெலங்கானாவில் சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நடந்தது. ஆனால் ஓட்டுப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்குவதற்கு முன்பு 29ம் தேதி நள்ளிரவில் திடீரென்று நாகர்ஜூனா சாகர் அணை பிரச்சனை விஸ்வரூபமெடுத்தது.
அதாவது அணையின் ஒரு பகுதியை ஆக்கிரமித்து ஆந்திரா தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் அதற்கு தெலங்கானா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கிருஷ்ணா நதி மேலாண்மை வாரியத்திடம் தெலங்கானா புகாரளித்துள்ளது. இது நிலுவையில் உள்ளது. இந்த அணையில் இருந்து தண்ணீர் திறப்பு என்பது தீர்ப்பாயத்தின் மூலம் தான் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த அணையை பொறுத்தமட்டில் மொத்தம் 36 மதகுகள் உள்ளன. இதில் இருமாநிலங்களுக்கும் தலா 18 மதகுகள் பிரித்து வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தான் அன்றைய தினம் ஆந்திர அதிகாரிகள் அணையை தங்களின் கட்டுப்பாட்டில் எடுத்து தண்ணீர் திறக்க முயன்றனர். அதாவது ஆந்திர காவல்துறையைச் சேர்ந்த சுமார் 400 போலீசார், மாநில நீர்ப்பாசன அதிகாரிகளுடன் அணைக்குள் நுழைந்தனர். ஆனால் அங்கிருந்த தெலுங்கானா அதிகாரிகளோ, அவர்களை நாகர்ஜூன சாகர் அணைக்கு உள்ளே செல்லவிடாமல் தடுத்தனர்.
இருப்பினும் ஆந்திரா அதிகாரிகள் தெலங்கானாவினரை மீறி அணையில் இருந்து ஆந்திராவுக்கு தண்ணீர் திறந்து விட்டனர். இதையடுத்து தெலுங்கானா அதிகாரிகள் மின்சாரத்தை துண்டித்தனர். இருப்பினும் மின்மோட்டார் மூலம் ஆந்திராவுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. மொத்தம் 10000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை உருவாக்கியது. அதோடு இரு மாநிலங்கள் இடையே பெரிய அளவில் மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. அதோடு தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில் தான் நாகர்ஜூனா சாகர் அணையை மத்திய அரசு தனது கட்டுப்பாட்டில் எடுத்துள்ளது. அதாவது அணையில் இருமாநிலங்கள் இடையே பதற்றம் அதிகரித்த நிலையில் மத்திய உள்துறை செயலர் அஜய் பல்லா தெலங்கானா, ஆந்திர மாநில அரதிகாரிகளுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தினார்.
அப்போது அணை விஷயத்தில் மோதலை தவிர்க்க அவர் கேட்டு கொண்டார். அதோடு தண்ணீர் திறப்பு விஷயத்தில் நியாயமான பங்கீடு அவசியம் என கூறினார். ஆனால் அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. இதையடுத்து மத்திய அரசு அணையை தனது கட்டுப்பாட்டில் எடுத்தது. அங்கு ரிசர்வ் போலீஸ் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் நீர் தொடர்பான பங்கீட்டு ஒப்பந்தத்தின்படி இரு தரப்புக்கும் தண்ணீர் வழங்குவதை உறுதி செய்ய உள்ளனர்.












Click it and Unblock the Notifications