நாட்டிலேயே அதிக ஊழல் நடக்கும் மாநிலம் தெலுங்கானா.. பிஆர்எஸ் குடும்ப ஆட்சி - ராகுல் காந்தி சுளீர்
ஐதராபாத்: இந்தியாவிலேயே தெலுங்கானா மாநிலத்தில்தான் அதிக ஊழல் நடப்பதாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி குற்றம்சாட்டி இருக்கிறார்.
தென் மாநிலமான தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவ் தலைமையிலான பி.ஆர்.எஸ் ஆட்சி 2 வது முறையாக நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சிகாலம் இந்த ஆண்டு இறுதியுடன் நிறைவடைய உள்ள நிலையில் கடந்த சில நாட்களுக்கு தெலுங்கானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. அதன்படி வரும் நவம்பர் 30 ம் தேதி தெலுங்கானாவில் வாக்குப்பதிவு நடைபெற்று டிசம்பர் 3 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தேர்தலுக்கான பணிகளும் ஆளும் பிஆர்எஸ், காங்கிரஸ், பாஜக, மஜ்லிஸ் கட்சி ஆகியவை தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. பிஆர்எஸ் கட்சி கடந்த ஆகஸ்டு மாதமே மொத்தம் உள்ள 119 தொகுதிகளில் 115 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அறிவித்து பிரச்சாரத்தை தொடங்கி உள்ளது. இந்த நிலையில் இம்முறை 2 தொகுதிகளில் முதலமைச்சர் கேசிஆர் போட்டியிடப்போவதாக அறிவித்து இருக்கிறார். இம்முறை பிஆர்எஸ், காங்கிரஸ், பாஜக இடையே மும்முனை போட்டி நிலவுவதாக கூறப்பட்டாலும், பிஆர்எஸ் - காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியினர் விஜயாபெரி என்ற யாத்திரையை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே காங்கிரஸ் கட்சிக்கு பிரச்சாரம் செய்வதற்காக அக்கட்சியின் எம்பி ராகுல் காந்தி 3 நாள் பயணமாக தெலுங்கானா மாநிலத்திற்கு வருகை தந்து உள்ளார். இந்த யாத்திரையில் கலந்துகொண்டு பேசிய அவர், "தெலுங்கானா மாநிலத்தில் மக்களின் ஆட்சி நடைபெற வேண்டும் என நீங்கள் கனவு காண்கிறீர்கள். ஆனால், ஒரு குடும்பத்தின் ஆட்சிதான் தெலுங்கானாவில் நடந்து வருகிறது. ஒட்டுமொத்த தெலுங்கானா மாநிலமும் ஒரு குடும்பத்தின் கைகளில் இருக்கிறது.
இந்த மாநிலத்தில்தான் இந்தியாவிலேயே அதிகளவில் ஊழல் நடக்கிறது. பிஆர்எஸ், மஜ்லிஸ் கட்சி, பாஜக ஆகிய கட்சிகள் காங்கிரஸ் கட்சிக்கு எதிராகவே பேசி வருகின்றன. தெலுங்கானாவில் காங்கிரஸுக்கு எதிராக பிஆர்எஸ் - மஜ்லிஸ் கட்சி - பாஜக ரகசிய கூட்டணி அமைத்து உள்ளன. வரும் தேர்தலில் சந்திரசேகர் ராவ் தோல்வி அடைவார். இந்த தேர்தல் ராஜாவுக்கும் பிரஜாவுக்கு (மக்கள்) இடையேயானது. கடந்த 10 ஆண்டுகளில் தெலுங்கானா மக்களுக்கும் தெலுங்கானா முதலமைச்சர் கேசிஆருக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்து உள்ளது." என்று தெரிவித்து இருக்கிறார்.












Click it and Unblock the Notifications