Saina Nehwal Separation: முடிவுக்கு வந்த 7 ஆண்டு திருமண வாழ்க்கை.. கணவரை பிரிவதாக அறிவித்தார் சாய்னா நேவால்
ஹைதராபாத்: பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் தனது கணவர் காஷ்யப்பை விட்டுப் பிரிந்து வாழ முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளார். இது தொடர்பான அறிவிப்பை சாய்னா தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். இதன் மூலம் சாய்னா- காஷ்யப் தம்பதியின் 7 வருடத் திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது.
இந்தியாவின் நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனைகளில் ஒருவர் சாய்னா நேவால்.. பல சர்வதேச தொடர்களில் இந்தியாவுக்காக வெற்றிகளைக் குவித்துள்ளார். கடந்த 2012ல் லண்டனில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளிலும் சாய்னா நேவால் வெண்கலம் வென்றிருந்தார். 2018 ஆசிய விளையாட்டு போட்டிகளில் வெண்கலம் வென்ற இவர், கமன்வெல்த் போட்டிகளில் இரு தங்கத்தை வென்றுள்ளார்.

இவர் கடந்த 2018ம் ஆண்டு காஷ்யப்பை திருமணம் செய்து கொண்டார். இருவருமே ஹைதராபாத்தில் உள்ள புல்லேலா கோபிசந்த் அகாடமியில் பயிற்சி பெற்றவர்கள். காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்றுள்ள காஷ்யப், சர்வதேச அரங்கிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதற்கிடையே இந்தத் தம்பதியின் 7 ஆண்டு திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது.
திருமண வாழ்க்கையில் இருந்து விலகவுள்ளதாக சாய்னா நேவால் நேற்று அறிவித்தார். இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "வாழ்க்கை சில நேரங்களில் நம்மை வெவ்வேறு திசைகளில் அழைத்துச் செல்கிறது. நீண்ட யோசனைக்குப் பிறகு, காஷ்யப் பருபள்ளியும் நானும் பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளோம். இந்த நேரத்தில் எதிர்காலம் சிறப்பாக அமையும் என மட்டும் யோசிக்கிறேன். இந்த நேரத்தில் எங்கள் தனிப்பட்ட விருப்பத்தைப் புரிந்து கொண்டு மதிப்பளித்ததற்கு நன்றி" என்றார்.
இது தொடர்பாக காஷ்யப் இதுவரை எந்தவொரு தகவலையும் பகிரவில்லை. 10 ஆண்டுகளுக்கு மேலாகக் காதலித்து வந்த சாய்னாவும் காஷ்யப்பும் 2018இல் திருமணம் செய்து கொண்டனர். காஷ்யப் பேட்மிண்டனில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு பயிற்சியாளராக மாறினார்.. சாய்னாவுடன் இணைந்து பணியாற்றினார்.
2019 தேசிய சாம்பியன்ஷிப்பில் நல்ல ஃபார்மில் இருந்த பி.வி.சிந்துவை சாய்னா தோற்கடித்திருந்தார். அப்போது காஷ்யப் தான் அவருக்கு வழிகாட்டியாக இருந்தார். காஷ்யப் பயிற்சியின் கீழ், 2016க்குப் பிறகு ஏற்பட்ட தொடர் தோல்விகளில் இருந்து சாய்னா மீண்டு வர முயன்றார். எதிர்பார்த்த ரிசல்ட் கிடைக்கவில்லை என்ற போதிலும் இருவரும் தீவிரமாக முயற்சி செய்தனர். அந்தளவுக்கு இருவரும் பக்கபலமாகவே இருந்தனர்.
சாய்னா கடைசியாக ஜூன் 2023இல் பேட்மிண்டன் போட்டிகளில் விளையாடினார். அதன் பிறகு அவர் எந்தவொரு போட்டியிலும் விளையாடவில்லை என்ற பதிலும் இன்னும் தனது ஓய்வை அறிவிக்கவில்லை. இந்தச் சூழலில் திடீரென அவர் தனது கணவர் காஷ்யப்பை விட்டு பிரிந்து வாழ முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications