"முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்வோம்" அமித்ஷா பேச்சு.. கொந்தளித்த ஓவைசி.. சூடாக பதில்
ஹைதராபாத்: தெலுங்கானாவில் பாஜக ஆட்சி அமைந்தால் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டு வரும் 4 சதவீத இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என்று உள்துறை அமித்ஷா நேற்று பேசியிருந்தார். அமித்ஷாவின் இந்த பேச்சுக்கு ஐதராபாத் எம்.பி ஓவைசி பதிலடி கொடுத்துள்ளார்.
தெலுங்கானாவில் பாரதிய ராஷ்டிர சமிதி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக சந்திரசேகர் ராவ் உள்ளார்.

மத்தியில் பாஜகவுக்கு எதிராக ஒரு அணியை உருவாக்குவதில் முனைப்பு காட்டும் மாநில முதல்வர்களில் சந்திரசேகர் ராவும் முக்கியமானவர். அதேபோல், பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசை கடுமையாக விமர்சித்தும் வருகிறார்.
பிரதமர் மோடி தெலுங்கானா மாநிலத்திற்கு வரும் போது அவரை வரவேற்காமல் புறக்கணிப்பது என தனது எதிர்ப்பை சந்திரசேகர் ராவ் காட்டி வருகிறார். தெலுங்கானா மாநிலத்தில் நடப்பு ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், மாநிலமான தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் மூத்த தலைவரும் பாஜக தேசிய தலைவருமான அமித்ஷா கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அமித்ஷா, தெலுங்கானாவில் பாஜக ஆட்சி அமைந்தால் முஸ்லீம்களுக்கு வழங்கப்பட்டு வரும் 4 சதவீத இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என்றார். இது தொடர்பாக அமித்ஷா கூறுகையில், " மத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவது அரசியல் சாசனத்திற்கு எதிரானது. இந்த இட ஒதுக்கீட்டு உரிமையை எஸ்.சி, எஸ்.டி மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்குவோம். தெலுங்கானாவில் பாரதிய ராஷ்டிர சமிதி ஊழல் ஆட்சி நடத்தி வருகிறது.
ஊழல் கறைபடிந்த அரசை நீக்கும் வரை பாஜகவின் போராட்டம் ஓயாது. மத்திய அரசின் நலத்திட்டங்கள் தெலுங்கானாவின் ஏழை எளிய மக்களை சென்றடைவது இல்லை. ஓவைசியின் திட்டங்களை சந்திர சேகர் ராவ் தெலுங்கானாவில் அமல்படுத்தி வருகிறார். ஓவைசியை கண்டு நாங்கள் அஞ்சவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தெலுங்கானா மாநில அரசு ஏழை எளிய மக்களுக்காக நடத்தப்படும். ஓவைசிக்காக நடத்தப்படாது" என்றார்.
முஸ்லிம்களுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியதற்கு அசாதூதின் ஒவைசி பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து ஒவைசி கூறுகையில், "முஸ்லீம்களுக்கு எதிராக பேசுவதை தவிர தெலுங்கானா குறித்து எந்த ஒரு தொலைநோக்கு பார்வையும் பாஜகவிற்கு இல்லை. போலி என்கவுன்டர்கள், சர்ஜிக்கல் ஸ்டிரைக்ஸ், ஊரடங்கு, கிரிமினல்களை விடுவிப்பது & புல்டோசர்ஸ் போன்றவகளைத்தான் அவர்களால்( பாஜக) கொடுக்க முடியும்.
உண்மையிலேயே அமித்ஷாவிற்கு எஸ்.சி.எஸ்.டி மற்றும் ஓபிசி பிரிவினருக்கு நீதி கொடுக்க வேண்டும் என்பதில் அக்கறை இருந்தால் அவர் 50 சதவீத இட ஒதுக்கீடு கட்டுப்பாட்டை அரசியல் சாசன திருத்தம் மூலம் அகற்ற வேண்டும். பின் தங்கிய முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்படுவது தரவுகளின் அடிப்படையில் கொடுக்கப்படுகிறது" என்றார்.












Click it and Unblock the Notifications