அமைச்சரின் கான்வாய் வாகனம் செல்வதற்காக.. சிக்னலில் நிறுத்தப்பட்ட 2 ஆம்புலன்ஸ்கள்.. அதிர்ச்சி வீடியோ!
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் அமைச்சர் ஒருவரின் கான்வாய் வாகனம் செல்வதற்காக 2 ஆம்புலன்சுகள் நிறுத்தப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பான வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஹைதராபாத்தில் உள்ள மசாப் டேங்க் பகுதியில் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருக்கின்றன. நீண்ட நேரமாக சைரன் ஒலித்துக் கொண்டு ஒரு ஆம்புலன்ஸ் வாகனமும் நிற்கிறது. இதற்கு பின்னாலும் ஒரு ஆம்புலன்ஸ் நிற்கிறது.

நிறுத்தப்பட்ட ஆம்புலன்ஸ்கள்
ஆம்புலன்சில்களில் இருக்கும் இரண்டு சுகாதாரப் பணியாளர்கள் அந்த சாலையில் பணியில் இருந்த போக்குவரத்து போலீஸ்காரர் இருக்கும் இடத்துக்கு சென்று ஆம்புலன்ஸ் செல்வதற்காக வழி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்று கேட்கிறார்கள். அவர்களிடம் கொஞ்சம் காத்திருக்கும்படி அந்த போலீஸ்காரர் கூறுகிறார்.

கடும் எதிர்ப்பு
அங்கு இருந்து வெளியான வேறு ஒரு வீடியோவில் ''ஆம்புலன்ஸ் காத்திருக்கும் போது ஒரு அமைச்சருக்கு போக்குவரத்து ஏன் நிறுத்தப்பட்டது? என்று போலீஸ்காரரிடம் ஒரு நபர் கேட்கிறார். அதற்கு ''இது ஒரு மந்திரி அல்ல, அது யாருடைய கான்வாய் என்று தெரியாது' என்று போலீஸ்காரர் பதில் அளிக்கிறார். இது தெரியாத போதிலும், ஆம்புலன்ஸ்கள் நிறுத்தப்பட்டதற்கு அங்கு இருந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அமைச்சரின் கான்வாய் வாகனம்
அங்கு நின்ற அந்த ஆம்புலன்ஸ்கள் மகாவீர் மருத்துவமனையில் இருந்து விரிஞ்சி மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. தெலுங்கானா உள்துறை அமைச்சர் மஹ்மூத் அலியின் கான்வாய் வாகனம் செல்லவே போக்குவரத்து நிறுத்தப்பட்டதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர். இந்த நிலையில் இது தொடர்பாக ஹைதராபாத் போக்குவரத்து போலீசார் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

போலீசார் அறிக்கை
இரண்டு ஆம்புலன்ஸ்கள் ஒரு சிக்னலில் நின்றுள்ளது. அவற்றில் ஒன்று மட்டுமே ஒரு நோயாளியைக் கொண்டு சென்றுள்ளது. ஆம்புலன்ஸ் ஊழியர்கள் போலீஸை எச்சரித்தவுடன் அந்த ஆம்புலன்ஸ்கள் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டன. ஆம்புலன்சில் சென்ற நோயாளி, தற்போது நன்றாக இருக்கிறார் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications