கொல்கத்தா: 13 வயது சிறுமியைக் கடத்தி, ஓடும் டாக்ஸியில் பாலியல் பலாத்காரம்
கொல்கத்தா: 13 வயது சிறுமியை கடத்தி, கிட்டத்தட்ட 4 மணி நேரம் ஓடும் டாக்சியில் வைத்து 3 பேர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் கொல்கத்தாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்தாண்டு ஓடும் பேருந்தில் மருத்துவமாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டு படுகொலை செய்யப் பட்டதைத் தொடர்ந்து நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளுக்கு எதிராக வலுவான சட்டம் இயற்றப் பட்டது.
ஆனபோதும், பெண்களுக்கான பாலியல் வன்முறைகள் தொடர்ந்த வண்ணம் தான் உள்ளன. அதிலும் குறிப்பாக பெண்களுக்கு எதிரான குற்றங்களில் மேற்கு வங்காளம் முதலிடத்தில் உள்ளதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் நெருங்கி வரும் வேளையில் கொல்கத்தாவின் பரபரப்பான பார்க் சர்க்கஸ் வீதியில் 13 வயது சிறுமி ஓடும் டாக்ஸியில் பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டுள்ளது பலரையும் அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
கொல்கத்தாவின் பர்க் வீதியில் தனது தாயோடு நடைபாதையில் வசித்து வருபவர் பாதிக்கப் பட்ட 13 வயது சிறுமி. பனி அதிகமாக இருப்பதால், அச்சிறுமியை கடந்த சில தினங்களாக அருகில் இருந்த காப்பகத்திற்கு அனுப்பி உறங்கச் சொல்லி இருக்கிறார் அவரது தாயார்.
வழக்கம்போல், கடந்த ஞாயிறன்று இரவும் தனது மகளை காப்பகத்தில் உறங்க அனுப்பியுள்ளார் அத்தாய். ஆனால், அச்சிறுமியோ நேராக காப்பகத்திற்குச் செல்லாமல் தனது தோழி வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து இரவு 11 மணிக்கு காப்பகத்திற்குப் புறப்பட்ட சிறுமியை வழிமறித்துள்ளார் ஒருவர்.
தன்னை போலீஸ் என அறிமுகப் படுத்திக் கொண்ட அந்த 32 வயது நபர், அச்சிறுமிக்கு உணவு வாங்கிக் கொடுத்துள்ளார். பின்னர், சிறுமிக்கு கிறிஸ்துமஸ் பரிசு கொடுப்பதாகக் கூறி டாக்ஸியில் ஏறச் சொல்லியுள்ளார். அவரது பேச்சை நம்பிய சிறுமியும் டாக்ஸியில் ஏறியுள்ளார்.
அதே ஏரியாவில் கிட்டத்தட்ட 4 மணி நேரம் சுற்றி வந்த அந்த டாக்ஸியில் அச்சிறுமியை டிரைவர் உட்பட 3 பேர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அதனைத் தொடர்ந்து அதிகாலை 4 மணியளவில் மீண்டும் பழைய இடத்திலேயே அச்சிறுமியை இறக்கி விட்டுள்ளனர்.
நேராக வீட்டிற்குச் சென்ற சிறுமியை கண்ட அவளது தாய், அவளிடம் நடத்திய விசாரணையில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டது தெரிய வந்துள்ளது. உடனடியாக காவல்நிலையம் சென்ற தாய் இது குறித்துப் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் விரைந்து செயல்பட்ட போலீசார் சிறுமியை ஏமாற்றி டாக்ஸியில் ஏறச் செய்த குற்றவாளியைக் கைது செய்துள்ளனர். விசாரணையில் அவனது பெயர் அன்வர் எனத் தெரிய வந்துள்ளதாக தெரிவித்துள்ள போலீசார், மீதமுள்ள இரண்டு குற்றவாளிகளைத் தீவிரமாக தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications