ம.பியில் ஆட்சிக்கு வந்தால் 300 யூனிட் இலவச மின்சாரம்..கோதாவில் கெஜ்ரிவால்! பாஜக, காங்.க்கு நெருக்கடி
போபால்: மத்திய பிரதேசத்தில் ஆம் ஆத்மி ஆட்சி அமைந்தால், வீடு தோறும் 300 யூனிட் இலவச மின்சாரம், வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு ரூ.3000 உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை கெஜ்ரிவால் அளித்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக சிவ்ராஜ் சிங் சவுகான் உள்ளார். நடப்பு ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்க பாஜக முயன்று வருகிறது. அதே வேளையில் பாஜகவை வீழ்த்தி ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் காங்கிரஸ் கட்சி வியூகங்களை வகுத்து வருகிறது. இதனிடையே இந்த கோதாவில் ஆம் ஆத்மியும் இறங்கியுள்ளது.

தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் இருக்கும் நிலையில் தற்போதே வாக்குறுதிகளை ஆம் ஆத்மி கட்சி அறிவிக்க தொடங்கிவிட்டது. அதாவது, சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றால், 300 யூனிட் இலவச மின்சாரம், இலவச மருத்துவம் உள்பட பல வாக்குறுதிகளை கெஜ்ரிவால் அறிவித்துளார். மத்திய பிரதேசத்தின் சத்னா நகரில் நடந்த பொதுக் கூட்டத்தில் பங்கேற்று கெஜ்ரிவால் பேசியதாவது: -
மத்திய பிரதேசத்தில் ஆம் ஆத்மி ஆட்சி அமைந்தால் 300 யூனிட் இலவச மின்சாரம், அனைவருக்கும் இலவச மருத்துவ சிகிச்சை, வேலையில்லா இளைஞர்களுக்கு ரூ. 3 ஆயிரம் உதவித் தொகை உள்ளிட்டவை வழங்கப்படும். வேலையில்லா அனைவருக்கும் வேலை வாய்ப்பு வழங்கப்படும். வேலை வாய்ப்பு செய்து கொடுப்பதில் வெளிப்படத்தன்மை பின்பற்றப்படும்.

ஊழலை ஒழிப்போம் என்பன உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை கெஜ்ரிவால் அளித்தார். தொடர்ந்து ஆளும் பாஜகவை கடுமையாக சாடிய கெஜ்ரிவால், மத்திய பிரதேசத்தில் 'மாமா' இருப்பதாக நான் அறிந்தேன். மருமகன்கள் மற்றும் மருமகள்களையே மோசடி செய்த மாமா மீது நம்பிக்கை வைக்க வேண்டாம். உங்களுடைய மகன், சகோதரர் மற்றும் சாச்சா (மாமா) வந்துள்ளார். சாச்சா மீது நம்பிக்கை வையுங்கள்.
நான் மத்திய பிரதேச்த்தில் கல்லூரிகள், மருத்துவ மனைகள் ஆகியவற்றை கட்டி தருவேன். வேலை வாய்ப்பு வழங்குவேன்" என்றார். மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகானை மக்கள் மாமா என அழைப்பது உண்டு. எனவே இவ்வாறு கெஜ்ரிவால் விமர்சித்துள்ளார். அரவிந்த் கெஜ்ரிவால் ஏற்கனவே ஆட்சியில் உள்ள மாநிலங்களான டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களிலும் இது போன்ற வாக்குறுதிகளைத்தான் கொடுத்து இருந்தார்.












Click it and Unblock the Notifications