டைம் மெஷின் மூலம் இளமையாக மாறலாம்.. ரூ. 35 கோடி மோசடி செய்த உ.பி. தம்பதி
கான்பூர்: கான்பூரில் அதிக மாசு காரணமாக வயது முதிர்வு அதிகரித்து வருகிறது. உங்களுடைய வயதைக் குறைத்து இளமையான தோற்றத்தை வரவழைப்பதாகக் கூறி 20க்கும் மேற்பட்டோரிடம் ரூ. 35 கோடி மோசடி செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆன்லைன் மோசடி, ஆஃப்லைன் மோசடி, குறைந்த முதலீட்டில் அதிக லாபம், இரட்டிப்பு லாபம் என்று பல்வேறு ரூட்டுகளில் மோசடி சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. காவல் துறை சார்பில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வந்தாலும் பொதுமக்கள் தொடர்ந்து மோசடி சம்பவங்களில் சிக்கி வருவது வாடிக்கையாகி உள்ளது.

வழுக்கை தலையில் முடி வளர வைப்பது, கருப்பாக உள்ளவர்களை வெள்ளையாக மாற்றுவது, நீண்ட தலைமுடி வளரச் செய்வது, குண்டானவர்களை ஒல்லியாக்குவது, ஒல்லியானவர்களை குண்டாக்குவது என சமூக வலைதளங்களைத் திறந்தாலே இதுதொடர்பான விளம்பரங்கள் தான் கண்களைப் பறிக்கும். இதில் பெரும்பாலான விளம்பரங்கள் மோசடி பேர் வழியாகத்தான் இருப்பார்கள்.
அந்த வகையில், கான்பூரில் நடந்துள்ள ஒரு சம்பவம் வேற லெவல். அதாவது, கான்பூரில் அதிக மாசு காரணமாக பெரும்பாலானோருக்கு வயது முதிர்வு அதிகரித்து வருவதாகவும், உங்களுடைய வயதைக் குறைத்து இளமையான தோற்றத்தை வரவழைப்பதாகக் கூறி 20க்கும் மேற்பட்டோரிடம் ரூ. 35 கோடியை ஒரு தம்பதி மோசடி செய்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.
கான்பூரில் உள்ள கித்வாய் நகரில் ரிவிவல் வேர்ல்டு எனும் பெயரில் தெரபி சென்டர் ஒன்றை தம்பதி நடத்தி வந்துள்ளனர். இந்த தம்பதி கான்பூரில் உள்ள வயதானவர்களிடம் இப்பகுதியில் மாசுபாடு அதிகரித்துள்ளதால் வயது முதிர்வுப் பிரச்னை அதிகரித்து வருகிறது. எங்களிடம் இஸ்ரேலில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட டைம் மெஷின் உள்ளது.
இந்த டைம் மெஷின் மூலமாக ஆக்ஸிஜன் தெரபி செய்து கொண்டால் இளமை தோற்றத்தைப் பெற முடியும் என்று கூறி நம்ப வைத்துள்ளனர். அதோடு மட்டுமல்லாமல் இந்த ஆக்ஸிஜன் தெரபியை ஒருமுறை செய்து கொள்வதற்கு 90 ஆயிரம் ரூபாய் கட்டணமாக வசூலித்துள்ளனர். மேலும், நண்பர்களை பரிந்துரை செய்தால் சலுகை உள்ளது என்று கூறி விளம்பரப்படுத்தி உள்ளனர்.
இந்த விளம்பரத்தை நம்பி ஏராளமான மக்கள் இளமையான தோற்றம் பெற சிகிச்சை பெற தங்களுக்குத் தெரிந்த பலரை அழைத்து வந்துள்ளனர். ஆனால், வயதானவர்கள் யாருக்குமே இளமையான தோற்றம் வரவில்லை. எந்தவொரு மாற்றமுமே ஏற்படாத நிலையில்தான் தாங்கள் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்துள்ளனர். இந்த மோசடி குறித்து சிலர் காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளனர்.

இதையடுத்து, அந்த மோசடி நிறுவனத்தின் தம்பதி தலைமறைவாகி விட்டனர். போலீஸாாின் விசாரணையில், இதுவரை 20க்கும் மேற்பட்டோரிடம் சுமார் ரூ. 35 கோடி வரை மோசடி அந்த தம்பதி மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது. தலைமறைவாகியுள்ள தம்பதியைப் பிடிக்க பல்வேறு நடவடிக்கைகளை போலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், அவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லாமல் இருக்கும் வகையில் விமான நிலைய அதிகாரிகளும் உஷார்படுத்தப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications