ஸ்டிங் சிடி திரிக்கப்பட்டது, எங்களை மோசமானவர்களாக சித்தரிக்க நடந்த சதி - ஆம் ஆத்மி புகார்
டெல்லி: ஊடகங்களின் ஸ்டிங் ஆபரேஷனை சமாளிக்க முடியாமல் அர்விந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி தத்தளித்து வரும் நிலையில் அதுதொடர்பான காட்சிகள் அனைத்தும் போலியானது, திரிக்கப்பட்டது, தங்களது வேட்பாளர்களை மோசமானவர்கள் என சித்தரித்துக் காட்ட நடத்தப்படும் சதி என்று ஆம் ஆத்மி கட்சி கூறியுள்ளது.
ஊழலுக்கு எதிரான இயக்கம், வலுவான லோக்பால் மசோதா, லோக் ஆயுக்தா அவசியம் என்று க்ளீன் இமேஜ் பிரசாரத்தை மேற்கொண்ட அன்னா ஹசாரேவின் ஆதரவாளர் அர்விந்த் கெஜ்ரிவால். அவர் ஆம் ஆத்மி என்ற தனிக்கட்சியை தொடங்கினார். பின்னர் ராபர்ட் வதேரா, நிதின் கத்காரி என அரசியல் பெருந்தலைகளின் ஊழல்களை அம்பலப்படுத்தினார்.

இந்நிலையில்தான் அர்விந்த் கெஜ்ரிவால் தேசவிரோத சக்திகளிடம் இருந்து பணம் பெற்று கட்சியை நடத்துகிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் மத்திய அரசு அர்விந்த் கெஜ்ரிவாலின் கட்சிக்கான நிதி குறித்து விசாரணையை தொடங்கியது. இந்நிலையில் புதிய குண்டை கெஜ்ரிவாலின் குருநாதர் அன்னா ஹசாரே வீசினார்.
ஊழலுக்கு எதிரான இயக்க நிதியை முறைகேடாக அர்விந்த் கெஜ்ரிவால் பயன்படுத்தி வருகிறார் என்றும் தமது பெயரையும் தவறாக பயன்படுத்தி வருகிறார் என்றும் குற்றம்சாட்ட ஆடிப்போனார் கெஜ்ரிவால். இப்போது ஆம் ஆத்மி கட்சியினரை கதிகலங்க வைக்கும் வகையில் ஊடகங்கள் ஸ்டிங் ஆபரேஷன்களை நடத்தி அம்பலப்படுத்தி வருகின்றன.
டெல்லி சட்டசபை தேர்தலில் போட்டியிட்ம் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்கள், தங்களுக்கு நிதி கொடுப்போரைப் பற்றி விசாரிக்காமலேயே பணம் வாங்குவதை அப்படியே படம் பிடித்து சிடிக்களாக போட்டு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பி வருகின்றன. இதனால் கெஜ்ரிவால் அதிர்ச்சியில் உறைந்திருக்கிறார்.
இப்படி ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர்கள் மனோஜ் குமார், தினேஷ் மொகானியா, இர்பான் உல்லா கான், முகேஷ் ஹூடா, பிரகாஷ், பவானா கவுர், ஷாஸியா லிமி என பலரும் சிக்கியிருக்கின்றனர்.
ஆம் ஆத்மி கட்சி இப்படி ஏடாகூடாமாக சிக்கியிருப்பது கண்டு காங்கிரஸும் பாஜகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றன. ஆனால் தங்களது கட்சிக்கு எதிராக காங்கிரஸும் பாஜகவும் சதியில் ஈடுபட்டு வருவதாக கதறுகிறார் அர்விந்த் கெஜ்ரிவால்.
இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்திலும் புகார் போயுள்ளது. அதேசமயம், ஆம் ஆத்மி கட்சியும் சுயமாக ஒரு விசாரணையை நடத்தியது. அதன் இறுதியில், இந்த சிடிக்கள் அனைத்தும் போலியானவை, திரிக்கப்பட்டவை என்று அக்கட்சி இன்று தெரிவித்தது.
இதுகுறித்து அக்கட்சியின் யோகேந்திர யாதவ் கூறுகையில், மீடியாசர்க்கார் சிடியானது போலியானது, திரிக்கப்பட்ட ஒன்று. பல பகுதிளை அதில் நீக்கியு்ளனர், திருத்தியுள்ளனர், எடிட் செய்துள்ளனர்.
இதன் மூலம் எங்களது வேட்பாளர்கள் மோசமானவர்கள் என்று மக்கள் மத்தியில் காட்ட சதி செய்துள்ளனர்.
எங்களது வேட்பாளர்கள் கண்ணியத்தை மட்டுமே சம்பாதித்தவர்கள் ஆவர். மீடியாக்களின் செயல் வருத்தம் தருகிறது. அவர்களை முறைப்படுத்தும் நேரம் வந்து விட்டது.
இந்த சிடியை நாங்கள் ஆறு பேர் கொண்ட குழுவினர் முழுமையாக ஆராய்ந்து பார்த்ததில் இது போலியானது என்பதைக் கண்டறிந்துள்ளோம். தேர்தல் ஆணையத்திடமும் இதுகுறித்து நாங்கள் தெரிவித்துள்ளோம்.












Click it and Unblock the Notifications