காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி.. கண்காட்சியில் தனுஷ், நயன்தாரா போஸ்டர்.. காரணம் என்ன?
வாரணாசி: காசி நகரில் தொடங்கியுள்ள காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள புகைப்பட கண்காட்சியில் நடிகர் தனுஷ், நயன்தாரா உள்ளிட்டோரின் புகைப்படங்கள் இடம்பெற்றிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர்களின் புகைப்படங்கள் என்ன காரணத்திற்காக கண்காட்சியில் இடம்பெற்றது என்பதை பார்க்கலாம்.
பிரதமர் நரேந்திர மோடியின் மக்களவை தொகுதியான வாரணாசியில் கடந்த 2 ஆண்டுகளாக காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்நாடு - காசி இடையிலான பழங்கால உறவை புதுப்பிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. தற்போது தொடர்ந்து 3வது ஆண்டாக நடக்கும் காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி இன்று தொடங்கவுள்ளது.

இந்த விழாவில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். 10 நாட்கள் நடக்கும் இந்த காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியில் தமிழ்நாட்டில் இருந்து 2,400 பேர் பங்கேற்க உள்ளனர். இதுமட்டுமல்லாமல் மத்திய பல்கலைக்கழக மாணவர்கள் 200 பேர் கலந்து கொள்கின்றனர்.
தமிழ்நாட்டில் இருந்து ரயிலில் காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள செல்பவர்களை மகா கும்பமேளாவில் ஒரு இரவு தங்க வைக்கவும், அயோத்தி ராமர் கோயிலுக்கு அழைத்து செல்லவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இம்முறை காசி தமிழ்ச் சங்கமத்தின் கருப்பொருளாக அகத்திய முனிவர் இருக்கிறார்.
காசி மற்றும் தமிழ்நாட்டிற்கு இடையிலான சிறந்த இணைப்பாக அகத்தியர் கருதப்படுவதால், இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதனிடையே காசி தமிழ்ச் சங்கமத்தில் புகைப்பட கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த புகைப்பட கண்காட்சியில் அதிகளவில் திரை பிரபலங்கள் இடம்பெற்றுள்ளனர். பிரபலங்களின் புகைப்படங்களை வைத்தால், எளிதாக தொடர்புபடுத்தி கொள்ள முடியும் என்பதால் செய்யப்பட்டிருக்கிறது.
நடிகர் எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, தனுஷ், விஜய் சேதுபதி, நயன்தாரா உள்ளிட்டோரின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. அதேபோல் கலை கலாச்சாரம் என்ற அடிப்படையில் தான் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கலை, கலாச்சாரத்துடன் தொடர்பு கொண்டதே சினிமா என்பதால், சினிமா கலைஞர்களின் புகைப்படங்கள் இருக்கின்றன.
அதேபோல் அகத்தியர், பாரதியார், திருவள்ளுவர், ஒளவையார், அப்துல் கலாம் உள்ளிட்டோர் குறித்த கருத்துகள், புகைப்படங்கள் தமிழ் மற்றும் இந்தி மொழியில் வைக்கப்பட்டுள்ளது. கங்கை நதிக் கரை ஓரத்தில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த கண்காட்சியை ஏராளமானோர் கண்டு ரசித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications