இந்த மாதத்தில் இந்தியாவைத் தாக்க அல் கொய்தா திட்டம்?
டெல்லி: அல் கொய்தா அமைப்பின் தீவிரவாதிகள் இந்த மாதத்தில் இந்தியாவைத் தாக்கத் திட்டமிட்டு வருவதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த செப்டம்பர் 4ம் தேதி அல் கொய்தா அமைப்பின் தலைவராக செயல்பட்டு வரும் ஈமான் அல் ஜவாஹிரி வெளியிட்ட வீடியோ உரையில், இந்தியாவில் அல் கொய்தா கிளை தொடங்கியிருப்பதாக அவர் கூறியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
அப்போது இந்திய துணைக் கண்டத்தில் இஸ்லாமிய ஆட்சியைக் கொண்டு வர வேண்டும், ஜிஹாத் புரட்சிக் கொடியை பறக்க விட வேண்டும் என்று கூறியிருந்ததும் நினைவிருக்கலாம்.
உலகின் பல பகுதிகளில் நடந்த தீவிரவாதத் தாக்குதல்களுக்கு அல் கொய்தா காரணமாக இருந்துள்ளது. மேலும் உச்சகட்டமாக 2001ம் ஆண்டு அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இரட்டைக் கோபுரத்தை விமானம் மூலம் தாக்கித் தகர்த்தது அல் கொய்தா. அப்போது பின்லேடன் அதன் தலைவராக இருந்தார்.
இருப்பினும் பின் லேடன் கொலை செய்யப்பட்ட பின்னர் அல் கொய்தா அமைப்புவலுவிழந்தது. இந்தியாவில் அதன் நிழல் கூட இல்லை என்று உளவுத்துறையினர் கூறி வருகின்றனர். இருப்பினும் சிமி அமைப்புடன் அல் கொய்தா கை கோர்த்திருப்பதாக தற்போது கூறப்படுகிறது. சிமி எனப்படும் இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கம் தடை செய்யப்பட்டதாகும். இதுவும் பல தீவிரவாத செயல்களில் ஈடுபட்டுள்ளது.
இந்த அமைப்பின் மூலம் இந்திய அரசுக்கு நெருக்கடி தர இந்தியாவை சீர்குலைக்க அல் கொய்தா முயலலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாடு முழுவதும் இம்மாதத் தொடக்கத்தில் பல்வேறு குண்டுவெடிப்புகளை நடத்தவும் அல் கொய்தா திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. தற்போது இந்தியாவில் தீபாவளி காலமாகும். எனவே இந்த மாதத்தை அல் கொய்தா தேர்வு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் நடந்த பர்த்வான் மற்றும் பிஜ்னோர் குண்டுவெடிப்புச் சம்பவங்களில் இந்த இரண்டு அமைப்புகளுக்கும் தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத்துறையினர் கூறுகிறார்கள்.
இதுகுறித்து உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்தியன் முஜாஹிதீன் தற்போது இந்தியாவில் வலுவிழந்து விட்டது. எனவே சிமியுடன், அல் கொய்தா கை கோர்த்துள்ளது. பர்த்வான், பிஜ்னூர் குண்டுவெடிப்புகள் அதைத்தான் காட்டுகின்றன என்றார்.
அக்டோபர் மாதத்தில் தசரா, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் வருவதால், இந்த மாதத்தில் தாக்குதல்களை நடத்தி இந்தியாவை சீர்குலைக்க அல் கொய்தா திட்டமிட்டிருக்கலாம் என்றும் அவர் கூறினார்.
தீபாவளி சமயத்தில் பெரும் நாச வேலைகளில் இவர்கள் ஈடுபடலாம் என்றும் உளவுத்துறையினர் எச்சரித்துள்ளனர். இதனால் அனைத்து மாநிலங்களையும் மத்திய உள்துறை அமைச்சகம் உஷார்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications