அதிர்ந்த ஆந்திரா.. வேலையை காட்டினாரா ஜெகன்? ஒரே வீட்டில் 700 ஓட்டு! 6000 டிடிபி ஆதரவாளர்கள் நீக்கம்
அமராவதி: ஆந்திர பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெற இருக்கும் சூழலில் அங்கு ஏற்பட்டு இருக்கும் மோசடி வாக்கு பிரச்சனை பொதுமக்கள் அதிர்ச்சியடைய செய்து இருக்கிறது.
ஆந்திர பிரதேசத்தில் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசைத் தேர்தலில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் கட்சியை வீழ்த்தி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. முன்னாள் முதலமைச்சர் ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன் மோகன் ரெட்டி முதல் முறையாக முதலமைச்சர் ஆனார்.

2024 ஆம் ஆண்டு மே மாதம் அங்கு சட்டசபைத் தேர்தல் நடைபெறுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. இதற்கான பணிகளில் இப்போதே ஆளும் கட்சியும், எதிர்க்கட்சிகளும் இறங்கிவிட்டன. இந்த நிலையில்தான் ஆந்திர பிரதேசத்தில் போலி வாக்குகள் பிரச்சனை பூதாகரமாகி இருக்கிறது. ஆந்திர பிரதேசத்தின் கர்னூல் மாவட்டத்தில் இந்த பிரச்சனை முதலில் ஏற்பட்டது.
அங்குள்ள ஒரே குடும்பத்தில் இருந்து மட்டும் 700 வாக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாக அதிர்ச்சிகர தகவலை அம்மாநில ஊடகங்கள் வெளியிட்டன. இது தொடர்பாக தொடர்ந்து ஆவணங்களை சேகரித்தப்போது ஏராளமான வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்தே நீக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.
உரவகோண்டா பகுதியில் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த 6000 வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்தே நீக்கம் செய்யப்பட்டு இருக்கின்றன.
இந்த பிரச்சனை தொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது. கடந்த 2022 ஆம் ஆண்டு பயவுலா கேஷவ் என்பவர் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திடம் இது தொடர்பாக புகார் அளித்தார். தொடர்ந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அவர் தேர்தல் ஆணையத்தை வலியுறுத்திக்கொண்டே இருந்து உள்ளார்.
இந்த நிலையில் தற்போது தலைமை தேர்தல் ஆணையம் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க முன்வந்து உள்ளது. போலி வாக்குகள் மற்றும் வாக்காளர் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்ட 2 மாவட்டங்களை சேர்ந்த அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு மாநில தேர்தல் ஆணையத்துக்கு தலைமை தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி இருக்கிறது. இதன் காரணமாக 2 மண்டல அதிகாரிகள் சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள இருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications