ஆகம விதிப்படி அர்ச்சகர்கள் நியமனம்- அனைத்து சாதியினர் அர்ச்சகராகும் ஆணை ரத்து இல்லை- சுப்ரீம்கோர்ட்
டெல்லி: இந்து கோயில்களில் அர்ச்சகர்களை ஆகம விதிகளின்படிதான் நியமிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பை வழங்கியுள்ளது. அதேநேரத்தில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வகை செய்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை உச்சநீதிமன்றம் ரத்தும் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் அனைத்து சாதியினரும் கோவில் கருவறைக்குள் நுழைந்து அர்ச்சனை செய்யும் உரிமையை வலியுறுத்தி கோவில் கருவறைக்குள் நுழையும் போராட்டத்தை நடத்துவதாக 1970ஆம் ஆண்டு திராவிடர் கழகத்தின் தலைவராக இருந்த தந்தை பெரியார் அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து 1970ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 2-ந் தேதி தமிழக சட்டசபையில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டம் கொண்டுவரப்பட்டது.

இதை எதிர்த்து அப்போது உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் 1972ஆம் ஆண்டு மார்ச் 14-ந் தேதியன்று தீர்ப்பு வழங்கியது. அதில் அர்ச்சகர்களை நியமிப்பது என்று வகுப்பு வேறுபாடு அல்லாத நடவடிக்கை; அதில் அரசாங்கம் தலையிட உரிமை உண்டு எனக் கூறியதுடன் தமிழக அரசின் சட்ட திருத்தம் செல்லும் என்றும் தீர்ப்பு வழங்கியது.
அதே நேரத்தில் சாதி, தீண்டாமையை இந்து மத உரிமையாக அரசியல் சட்டத்தின் 25, 26-வது பிரிவுகள் அங்கீகரிப்பதை உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியது. இந்த தீர்ப்பில் திருத்தம் கொண்டுவரப்பட்டிருந்தால் அனைத்து சாதியினரும் அர்ச்சகராக முடியும் என்ற சட்டம் நிறைவேறியிருக்கும்.
ஆனால் அப்படி ஒரு சட்ட திருத்தத்துக்கு தமிழகத்தில் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டது. உரிய அழுத்தங்கள் தரப்படாததால் மத்திய அரசும் அந்த திருத்தத்தை கண்டுகொள்ளவில்லை. இதனால் அனைத்து சாதியினரும் அர்ச்சகராக முடியாமல் கிடப்பில் போடப்பட்டுவிட்டது.
இதனைக் கண்டித்து 1973ஆம் ஆண்டு மீண்டும் போராட்டம் நடத்துவதாக தந்தை பெரியார் அறிவித்திருந்தார். ஆனால் அவர் காலாமாகிவிட்டார். இதனால் அனைத்து சாதியினரும் அர்ச்சகராதல் என்பது தந்தை பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளாகவே இருக்கிறது என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி உள்ளிட்ட திராவிட கட்சி, இயக்கத் தலைவர்கள் சுட்டிக்காட்டி கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்தும் கூட அந்த சட்ட திருத்தத்தை கொண்டுவர உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை. அதே நேரத்தில் 2006ஆம் ஆண்டு மே 23-ந் தேதியன்று தி.மு.க. ஆட்சிக் காலத்தில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதற்கான அவசர அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
இதற்கு எதிராக ஆதி சைவ சிவாச்சாரியார்கள் நலச் சங்கம் மற்றும் தென்னிந்திய திருக்கோயில் அர்ச்சகர்கள் பரிபாலன சபை ஆகியவை உச்சநீதிமன்றத்தில் ரிட் மனுவைத் தாக்கல் செய்தன. அதில், ஆகம விதிகளின்படி பிராமணர்கள் மட்டுமே அர்ச்சகராக முடியும் என சுட்டிக்காட்டியிருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சி.கே. தாக்கெர், அல்டமாஸ் கபீர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற தமிழக அரசின் ஆணைக்கு இடைக்கால தடை விதித்திருந்தனர்.
இதனிடையே அனைத்து சாதியை சேர்ந்த 207 மாணவர்கள் தமிழக அரசின் ஆகம பயிற்சிகளையும் முடித்து அர்ச்சகர் நியமனத்துக்காக காத்திருந்தனர். சிவாச்சாரியார்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பராசுரனும் பயிற்சி பெற்ற அர்ச்சக மாணவர்கள் சார்பாக மக்கள் உரிமை பாதுகாப்பு மையமும் இவ்வழக்கை நடத்தி வந்தனர்.
கடந்த ஏப்ரல் மாதம் நீதிபதிகள் ரஞ்சன் கோகய், என்.வி. ரமணா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டு தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்திருந்தது. இன்று இந்த வழக்கில் நீதிபதிகள் ரஞ்சன் கோகய், என்.வி. ரமணா ஆகியோர் தீர்ப்பு வழங்கினர்.
அதில், ஆகம விதிகளின்படிதான் அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் என்று நீதிபதிகள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர். ஆகையால் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக முடியாது என்று ஆகம விதிகளை வலியுறுத்தும் தரப்பு கூறுகின்றனர்.
தமிழக அரசு ஆணை ரத்து இல்லை..
அதேநேரத்தில் 2006ஆம் ஆண்டு தமிழக அரசு பிறப்பித்த அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற அரசாணையை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ரத்து செய்யவில்லை. இதனால் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற தரப்பு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தங்களுக்கு சாதகமானது என்று கூறுகின்றனர்.
உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு முழு விவரம்:












Click it and Unblock the Notifications