கடவுள் பெயரில் முறைகேடு.. பாஜக சரமாரி குற்றச்சாட்டு!.. சந்திக்க தயாராகும் சத்தீஸ்கர் காங்கிரஸ்
ராய்ப்பூர்: சூதாட்ட செயலி மூலமாக சத்தீஸ்கர் காங்கிரஸ் ரூ.508 கோடி தொகையை முறைகேடாக பெற்றதாக புகார்கள் எழுந்திருக்கும் நிலையில், முறைகேடுகளில் ஈடுபட கடவுளின் பெயர் பயன்படுத்தப்படுவதாக அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா குற்றம்சாட்டியுள்ளார்.
தெலங்கானா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நவம்பர் மாதம் 7ம் (நாளை) தொடங்கி 30ம் தேதி வரை பல்வேறு கட்டங்களாக நடைபெற இருக்கிறது. இதனையடுத்து மத்தியில் ஆளும் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் 5 மாநிலங்களிலும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த தேர்தல் பாஜகவுக்கு முக்கியமானதாகும். ஒருவேளை இதில் பின்னடைவு ஏற்பட்டால் அது நாடாளுமன்ற தேர்தல் வெற்றியையும் பாதிக்கும். அதேபோல காங்கிரசுக்கும் இந்த தேர்தல் எந்த அளவுக்கு கைகொடுக்கும் என்று பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
சத்தீஸ்கர் மாநிலத்தை பொறுத்த அளவில், மொத்தம் 90 பேரவை தொகுதிகள் இருக்கின்றன. முதல்கட்டமாக 20 தொகுதிகளுக்கு நாளையும், இரண்டாவது கட்டமாக 70 தொகுதிகளுக்கு நவம்பர் 17ம் தேதியும் தேர்தல் நடைபெறுகிறது. இங்கு ஆட்சியில் காங்கிரஸ் இருக்கிறது. எனவே ஆட்சி அதிகாரத்தை இந்த முறை கைப்பற்ற பாஜக தீவிரமாக முயன்று வருகிறது. இந்நிலையில் முதலமைச்சர் பூபேஷ் பாகல் மீது பாஜக கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கிறது.
அதாவது, "மகாதேவ் சூதாட்ட செயலி உரிமையாளர்களிடம் ரூ.508 கோடி தேர்தல் செலவுகளுக்காக முதலமைச்சர் பூபேஷ் பாகல் பெற்றிருக்கிறார்" என்று கூறியுள்ளார். வடமாநிலங்களில் மகாதேவ் சூதாட்ட செயலி மிகவும் பிரபலமானதாகும். இது பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்ததையடுத்து அமலாக்கத்துறை அதிரடி ரெய்டில் இறங்கியது. ரெய்டில் ரூ.5.86 கோடி கைப்பற்றப்பட்டதோடு ஆசிம் தாஸ் என்பவரும் கைது செய்யப்பட்டார்.
இவரது மொபைல்களை ஆய்வு செய்தபோது, இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான சுபம் சோனி என்பவர் அனுப்பிய மெயில்கள் மூலம், சுமார் ரூ.508.6 கோடி பணம் முதலமைச்சர் பூபேஷ் பாகலுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது என அமலாக்கத்துறை குற்றம்சாட்டியது. இதனையடுத்து முதலமைச்சர் பூபேஷ் பாகல் ஹவாலா பணத்தை தேர்தல் நிதிக்காக பயன்படுத்துவதாக பாஜக கடும் குற்றச்சாட்டுகளை அடுக்க தொடங்கியுள்ளது. இதுகுறித்து பேசிய அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, முறைகேடுகளில் ஈடுபட கடவுளின் பெயர் பயன்படுத்தப்படுவதாக விமர்சித்துள்ளார்.
மகாதேவ் என்பது இறைவனின் பெயர். இந்த பெயரை பயன்படுத்தி கொள்ளையடிப்பார்கள் என்று யாரும் நினைத்து கூட பார்த்திருக்க மாட்டார்கள். இந்த குற்றச்சாட்டுகளை கண்டு காமாக்யா கண்ணீர் விடுகிறார்" என்று விமர்சித்துள்ளார். மகாதேவனை சிவனாகவும், அவருடைய மனைவி சக்தியை கமாக்கியாவாகவும் வணங்கப்படுகிறது. இதனை குறிப்பிட்டுதான் சர்மா மேற்குறிப்பிட்டவாறு கூறியிருக்கிறார். மேலும் இந்த குற்றத்திற்காக அவர் சிறை செல்வார் எனவும் சர்மா எச்சரித்துள்ளார்.
பாகஜவின் குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் புறக்கணித்துள்ளது.பூபேஷ் பாகலின் புகழை கெடுக்கும் விதமாக இதுபோன்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதாகவும், மக்கள் இதற்கு சரியான பதிலடி கொடுப்பார்கள் என்றும் காங்கிரஸ் கூறியுள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ்தான் ஆட்சியை மீண்டும் கைப்பற்றும் என கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications