தீவிரவாதம்.. மதமாற்றம்.. முஸ்லீம்கள், கிறிஸ்தவர்களுக்கு எதிராக பாபா ராம்தேவ் சர்ச்சை பேச்சு
"பைஜாமா அணிவதாலும், மீசையை மழித்துக் கொள்வதாலும் தங்களுக்கு சொர்க்கத்தில் ஒரு இடம் இருப்பதாக முஸ்லிம்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். சொர்க்கம் பற்றிய அவர்களின் வரையறை, நரகத்தை விட கொடூரமாக இருக்கிறது" என்று கூறி
ஜெய்ப்பூர்: முஸ்லிம்கள் தீவிரவாதிகளாக மாறினாலும் நமாஸ் செய்வதை மறப்பதில்லை என்று, யோகா குரு பாபா ராம்தேவ் பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், கிறிஸ்தவர்கள், பிற மதத்தைச் சேர்ந்த அனைவரையும் கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
பாபா ராம்தேவின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பு மக்களும், முஸ்லிம் அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

சர்ச்சை ராம்தேவ்
பாஜகவின் தீவிர அனுதாபியாக அறியப்படும் யோகா குரு பாபா ராம்தேவ், அடிக்கடி சர்ச்சைக்குரிய வகையில் பேசுவது வழக்கம். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட, "பெண்கள் ஆடை அணியாமல் இருந்தால் அழகாக இருப்பார்கள்" என அவர் பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், மத ரீதியாகவும் சில சர்ச்சைக்குரிய கருத்துகளை கடந்த காலங்களில் பாபா ராம்தேவ் தெரிவித்துளார். அந்த வகையில் தற்போது அவர் பேசிய பேச்சு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

முஸ்லிம்களுக்கு எதிரான பேச்சு
ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தில் நடைபெற்ற இந்து மத மாநாட்டில் பாபா ராம்தேவ் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், "நீங்கள் ஒரு முஸ்லிமை அழைத்து, உங்கள் மதம் என்ன சொல்கிறது என்று கேளுங்கள். அதற்கு அவர், தங்கள் மதம் 5 முறை நமாஸ் (தொழுகை) செய்துவிட்டு, என்ன வேண்டுமானாலும் செய்யலாம் எனக் கூறுவார். அது, இந்து பெண்களை கடத்துவதாகவும் இருக்கலாம் அல்லது வேறு ஏதேனும் பாவச்செயலை செய்வதாகவும் இருக்கலாம். இஸ்லாத்துக்கு அர்த்தமே நமாஸ் செய்வதுதான் என பல முஸ்லிம்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றார்.

தீவிரவாதிகளாக மாறினாலும்..
மேலும், ராம்தேவ் கூறுகையில், அதனால்தான், நமது முஸ்லிம் சகோதரர்கள் சிலர் கொடூரக் குற்றங்களை செய்பவர்களாக இருக்கின்றனர். ஆனால், அவர்கள் 5 முறை நமாஸ் செய்துவிடுவார்கள். ஏனெனில், அதுதான் அவர்களுக்கு கற்பிக்கப்பட்டிருக்கிறது. முஸ்லிம்களில் பலர் தீவிரவாதிகளாக மாறுகிறார்கள், சிலர் மோசமான கிரிமினல்களாக இருக்கிறார்கள். அதே சமயத்தில், அவர்கள் நமாஸ் செய்வதை மறக்க மாட்டார்கள். முஸ்லிம்களை பொறுத்தவரை, சொர்க்கம் என்பது பைஜாமா அணிபவர்களுக்கும், மீசையை மழிப்பவர்களுக்கும், குல்லா அணிபவர்களுக்கும் மட்டுமே கிடைக்கும் என அவர்கள் நினைக்கிறார்கள். குரான் இவற்றை சொல்லவில்லை. ஆனால், அவர்களாகவே இவற்றையெல்லாம் செய்கிறார்கள் என்றும் தனது பேச்சில், குண்டை தூக்கி போட்டார் ராம்தேவ்.

மதம் மாற்றும் கிறிஸ்தவர்கள்
ராம்தேவ் பேச்சில் சர்ச்சை மறுபடியும் தொடர்ந்தது. அவர் மேலும் பேசுகையில்.. இவ்வாறு செய்வதால் தங்களுக்கு சொர்க்கத்தில் ஒரு இடம் இருப்பதாக முஸ்லிம்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அங்கு மது அருந்தும் பெண்களை சந்திக்கலாம் என அவர்கள் நம்புகிறார்கள். சொர்க்கம் பற்றிய அவர்களின் வரையறை, நரகத்தை விட கொடூரமாக இருக்கிறது. முஸ்லிம்கள் இப்படியென்றால், கிறிஸ்தவர்கள் அதற்கு மேலே. அவர்கள் பாவங்களை செய்துவிட்டு தேவாலயத்தில் இயேசுவின் சிலைக்கு முன்னால் நின்று கொண்டு அவர்களின் பாவங்களை மன்னிக்குமாறு வேண்டிக்கொள்வார்கள். முஸ்லிம்களும் சரி, கிறிஸ்தவர்களும் சரி. மற்றவர்கள தங்கள் மதத்துக்கு மாற்றுவதையே வேலையாக வைத்துள்ளனர். ஒரு கும்பல் இந்த உலகத்தையே கிறிஸ்தவத்துக்கு மாற்ற வேண்டும் என்றும், இன்னொரு கும்பல் இந்த உலகையே இஸ்லாத்துக்கு மாற்ற வேண்டும் என விரும்புகின்றன. இவ்வாறு பாபா ராம்தேவ் பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications