மன அழுத்தம்... 8 வயது பெங்களூர் சிறுமி தற்கொலை!!
பெங்களூரு: மன அழுத்தம் காரணமாக வாழப் பிடிக்கவில்லை என கடிதம் எழுதி வைத்து விட்டு 8 வயது சிறுமி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெங்களூருவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு யெலஹங்கா போலீஸ் சரகத்திற்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த எட்டு வயது சிறுமி ஒருவர் நேற்று தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார். அவரது வீட்டில் நடத்திய சோதனையில், சிறுமி தன் கைப்பட எழுதிய கடைசிக் கடிதத்தைப் போலீசார் மீட்டனர்.

தெளிவில்லாத கையெழுத்தில், ‘தனக்கு ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாகவே இந்த தற்கொலை முடிவை எடுத்திருப்பதாக' அக்கடிதத்தில் சிறுமி குறிப்பிட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், அக்கடிதத்தில் சிறுமி தனது பள்ளி குறித்து எதையும் குறிப்பிடவில்லை. எனவே, சிறுமியின் மன அழுத்தத்திற்கு பள்ளியும் ஏதேனும் வகையில் காரணமா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அதேபோல், சிறுமியின் பெற்றோரும் இச்சம்பவத்தால் அதிர்ச்சியில் உறைந்து போயிருப்பதால் அவர்களிடமும் இன்னமும் முழுமையாக விசாரிக்க முடியவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.
பத்து வயதிற்கும் குறைந்த குழந்தை ஒருவர் தற்கொலை செய்து கொள்வது பெங்களூருவில் இதுவே முதல்முறை என அதிர்ச்சி தெரிவித்துள்ளார் காவல்துறை கூடுதல் ஆணையர் அலோக் குமார்.
வாழ்க்கை என்றால் என்னவென்றே உணர்ந்து கொள்ளக் கூடிய போதுமான வயதில்லாத சிறுமி, அவசரப்பட்டு தனது வாழ்க்கையை முடித்துக் கொண்டது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications